Village Pongal Preparation 2024: பொங்கல் பண்டிகைக்குத் தயாராகும் கிராமங்கள்!.

தைப் பொங்கல் என்றாலே நகரத்திலிருந்து கிராமத்திற்குத் தான் படையெடுக்க வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் அனைவருக்கும் எழக்கூடும்.

village Festival celebration

“தைத்திருநாள், தமிழர் திருநாள், தைப் பொங்கல், சூரிய பொங்கல்“ என அனைத்துப் பெயர்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது தான் தை முதல் நாள் கொண்டாடக்கூடிய பொங்கல் திருநாள். தீபாவளி, புத்தாண்டு போன்ற பண்டிகைகளை உலகின் எங்கு இருந்தாலும் நாம் சிறப்பாக கொண்டாடி விடுவோம். ஆனால் தைப் பொங்கல் என்றாலே நகரத்திலிருந்து கிராமத்திற்குத் தான் படையெடுக்க வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் அனைவருக்கும் எழக்கூடும். ஆம் உழவர்களுக்கும், கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தும் பண்டிகைகளை அங்கு கொண்டாடுவதில் எவ்வித தவறும் இல்லை. குறிப்பாக கிராமத்தில் பொங்கலுக்கு முந்தைய வாரத்தில் இருந்தே கொண்டாட்டங்கள் களைக்கட்டும். வீட்டிற்கு வெள்ளையடிப்பது முதல் புத்தாடைகளை வாங்குவது என பொங்கலுக்கு ஏற்பாடுகள் தயாராகும்.

Thai pongal

நாம் எந்த பண்டிகைகளைக் கொண்டாடினாலும், முதலில் கோலங்களில் இருந்தது தான் ஆரம்பிப்போம். ஒவ்வொரு பண்டிகைக்கும் ஏற்றவாறு கோலங்கள் போட வேண்டும் என்ற தேடல்கள் இருக்கும். அதிலும் கிராமத்துக் கொண்டாட்டங்களில் பெண்கள் போட்டிப் போட்டுக் கொண்டு என்ன கோலங்களை வாசலில் போடலாம் என்ற தேடலில் இருப்பார்கள். இதே மட்டுமின்றி பொங்கலுக்கான பராம்பரிய சேலைகளை வாங்குவதிலும் ஆர்வம் காட்டத் தொடங்கிவிட்டனர். மேலும் வீடுகளில் உள்ள பெண்கள், தேவையில்லாத பொருள்களையெல்லாம் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபடுவார்கள். மேலும் வாசல்களில் மாவிலைத் தோரணங்கள், மஞ்சள் மற்றும் அம்மங்காப்பு செடிகளைத் தோரணமாக கட்டுவார்கள்.

பழங்காலத்தில் கிராமத்துப் பொங்கல்:

இன்றைக்குத் தான் கிராமத்திலும் வீடுகளின் அமைப்பு மாறிவிட்டது. மார்பிள், டைல்ஸ் கற்கள் பதித்த மாடி வீடுகள் பெரும்பாலும் வந்துவிட்டது. ஆனால் முன்பெல்லாம் அப்படியில்லை. பெரும்பாலும் வீடுகள் குடிசைகளாகத் தான் இருக்கும். இதனால் தான் ஆண்டிற்கு ஒருமுறை அதை புதுப்பிப்பார்கள். மண் தரை என்பதால் சாணம் மற்றும் கரம்பை மண் சேர்த்து மொழுகி அழகுப்படுத்துவார்கள்.

மேலும் சுண்ணாம்பு பால் கொண்டு வீட்டு திண்ணையில் விதவிதமாக சிக்கு கோலம் போடுவார்கள். அதிலும் இந்த சிக்கு கோலத்திற்கும் பெண்களின் வாழ்க்கையும் தொடர்பு இருக்கிறதாம். வளைவு நெளிவுகளையும், சிக்கல்களையும் சமாளித்து எப்படிகோலமிடுகிறார்களோ? அதைப் போன்று குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்களையும் சமாளிக்கும் திறன் பெண்களிடம் உள்ளது என முன்னோர்கள் தெரிவிக்கின்றனர்.

village pongal festival

இதோடு மட்டுமின்றி வீடுகளில் உள்ள பழைய துணிகள் மற்றும் பொருள்களையெல்லாம் அப்புறப்படுத்தி கிராமத்து மத்தியில் வைத்து எரிப்பார்கள். மேலும் குடும்பத்தில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் புத்தாடைகள் எடுத்துக்கொடுத்து பொங்கல் வைத்து வழிபாடுகள். கிராமம் என்றாலே மாடுகள் இல்லாமல் இருக்காது. மாட்டுப்பொங்கல் தினத்தன்று மாடுகளைக் குளிக்க வைத்து, கொம்புகளில் வண்ணம் தீட்டி, கலர் பொட்டிட்டு தங்களது குழந்தைகள் போன்று பராமரித்துப் பொங்கல் வைத்து வழிபடுவார்கள்.

மேலும் படிங்க:பொங்கல் பண்டிகைக்கு தித்திப்பான சர்க்கரை பொங்கல் ரெசிபி!

mattu pongal in village

இதோடு மட்டுமின்றி கிராமத்து மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போட்டிகள் வைத்துக் கொண்டாடுவார்கள். மேற்கூறியுள்ள பழக்கங்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிட்டாலும், இன்னமும் சில கிராமங்களில் ஊரே சேர்ந்து விதவிதமான போட்டிகளை வைத்துக் கொண்டாடும் வழக்கத்தில் உள்ளனர். ஊர் முழுவதும் உள்ள ஒவ்வொரு வீடுகளிலும் இதற்காக வரி போட்டு பொங்கல் திருவிழாவை 3 நாள்களும் கொண்டாடும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.

வருகின்ற இந்த தைத்திருநாளை நீங்களும் வயல்வெளிகளில் இயற்கையோடு இயற்கையாக கிராமங்களுக்குச் சென்று கொண்டாட முயற்சி செய்யுங்கள். நிச்சயம் ஒரு புது அனுபவமாக உங்களுக்கு இருக்கும் என்பது தான் நிதர்சன உண்மை.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP