முருகன் கோயில் என்றவுடன் நம் அனைவருக்கும் முதன் முதலில் நினைவுக்கு வருவது அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயில். வாழ்க்கையில் திருப்பம் எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு சென்று வழிபட்டால் நினைத்தது நடக்கும். திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மதுரை ரயில் நிலையத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. குடைவரை கோயிலான திருப்பரங்குன்றம் முருகன் கோயில் 8ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
சிவ தலமான திருப்பரங்குன்றம்
ஒரு வதம் நிகழும் போது வதம் நிகழ்த்தியவரை பிரம்மஹத்தி தோஷம் பற்றி கொள்ளும். இதன் காரணமாக மனிதப் பிறவியில் எவ்வளவு கடுமையாக உழைத்தாலும் தோல்விகளை சந்திக்க நேரிடும். மகிசாசூரன் என்ற அரக்கனை பார்வதி தேவி துர்க்கை வடிவம் எடுத்து வதம் செய்தார். கொன்றவர் கடவுளாக இருந்தாலும் பிரம்மஹத்தி தோஷம் அவரை தொற்றி கொண்டது. தோஷத்தில் இருந்து விடுபட சிவபெருமானிடம் துர்க்கை ஆலோசனை கேட்டார்.
அதற்கு சிவபெருமான் லிங்க வடிவத்தில் தான் வீற்றிருக்கும் திருப்பரங்குன்றம் மலைக்கு சென்று தவமிருக்க அறிவுறுத்துகிறார். தவத்தின் பயனால் கர்ம வினை அகன்றவுடன் காட்சியளிப்பதாக சிவபெருமான் கூறுகிறார். இதையடுத்து பார்வதி தேவி (துர்க்கை) திருப்பரங்குன்றம் மலை பகுதியை சுற்றி கிரிவலம் சென்று அடிவாரத்தில் லிங்கம் பிரதிஷ்டை செய்து தவத்தில் மூழ்கினார். இதையடுத்து பார்வதி தேவியின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது. தற்போதுள்ள திருப்பரங்குன்றம் கோயிலில் இதற்கு தேவி லிங்கம் எனப் பெயர். சோமாஸ்கந்தர் வடிவத்தில் சிவபெருமான் காட்சியளித்து இருக்கிறார். ஆரம்பத்தில் திருப்பரங்குன்றம் சிவ தலமாக விளங்கியுள்ளது.
திருப்பரங்குன்றம் முருகன் கோயில்
ஒரு முறை சிவபெருமான் பார்வதி தேவியிடம் மந்திர உபதேசம் கொடுத்த போது மடியில் அமர்ந்தபடி அதை முருகன் கேட்டுள்ளார். முறையாக மந்திர உபதேசம் பெறாதது தவறு என உணர்ந்த முருகன் தோஷத்தை நீக்க திருப்பரங்குன்றம் சென்று தவம் இருக்கிறார். திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்த பிறகு முருகன் குடிகொண்ட இடம் திருப்பரங்குன்றம். அதே போல தெய்வானையை மணந்த இடமும் திருப்பரங்குன்றம். இதனால் சிவ தலமாக இருந்த திருப்பரங்குன்றம் முருகனின் முதற்படை விடாக மாறியது.
மேலும் படிங்க நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்
திருப்பரங்குன்றம் கோயில் சிறப்புகள்
- முருகனின் அறுபடைகளின் ஐந்து வீடுகள் மலையில் உள்ளன. திருப்பரங்குன்றம் மட்டுமே நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இங்கு ஐந்து தீர்த்த குளங்கள் இருக்கின்றன.
- திருப்பரங்குன்றம் சென்று வழிபட்டால் திருமண தடை நீங்கும் என்பது நம்பிக்கை. இங்கு கருவறையில் முருகனின் வேலுக்கு மட்டுமே அபிஷேகம், பூஜை செய்யப்படும்.
- சோழ, பாண்டிய மன்னர்களின் ஆட்சி காலத்தில் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன.
- முகலாய படையெடுப்பு, கொடுங்கோல் பிரிட்டீஷ் ஆட்சியில் தமிழகத்தின் ஏராளமான கோயில்கள் சிதைக்கப்பட்டாலும் பூசாரி ஒருவரின் உயிர் தியாகத்தால் திருப்பரங்குன்றம் கோயில் தப்பியது.
- திருப்பரங்குன்றத்தில் பங்குனி உத்திரம், தைப்பூசம், ஆடி கிருத்திகை, வைகாசி விசாகம், கந்த சஷ்டி நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation