ஆடி மாதம் என்றாலே அம்மன் கோவில்கள் களைகட்டும். எல்லா அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜை செய்து கூழ் ஊற்றப்படும். இந்த நிலையில் தமிழக அரசின் சுற்றுலா துறை சார்பில் தஞ்சையில் ஆடி மாத அம்மன் கோவில்கள் சுற்றுலா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பதிவு செய்வோர் ஒரே நாளில் தஞ்சை மாநகரம் மற்றும் மாவட்டத்தில் உள்ள பிரதான கோவில்களில் சிறப்பு தரிசனம் செய்யலாம். ஜூலை 18ஆம் தேதி முதல் இந்த சேவை தொடங்கப்படவுள்ளது. இந்த சேவையின் முழு விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
தஞ்சை அம்மன் கோவில்கள் சுற்றுலா
தஞ்சையில் உள்ள அருள்மிகு வராகி அம்மன் பெரிய கோவில், அருள்மிகு பங்காரு காமாட்சி அம்மன் திருக்கோவில், புன்னைநல்லூரில் உள்ள அருள்மிகு மகா மாரியம்மன் திருக்கோவில், திருக்கருகாவூரில் உள்ள அருள்மிகு கற்பரட்சாம்பிகை திருக்கோவில், பட்டீஸ்வரத்தில் உள்ள அருள்மிகு துர்கை அம்மன் திருக்கோவில், வலங்கைமானில் உள்ள அருள்மிகு பாடைகட்டி மகா மாரியம்மன் திருக்கோவில், திருநாகேஸ்வரத்தில் உள்ள அருள்மிகு நாகநாதசுவாமி கிரிகுஜாம்பிகை திருக்கோவில், கும்பகோணம் மகாமக குளம் அருள்மிகு காசி விஸ்வநாதர் விசாலாட்சி திருக்கோவில், தாராசுரம் அருள்மிகு ஜராவதேசுவரர் பெரியநாயகி அம்மன் திருக்கோவில் என பத்து கோவில்களில் சிறப்பு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவீர்கள்.
அம்மன் கோவில்கள் சுற்றுலா முன்பதிவு விவரம்
ஆடி மாதம் முழுவதும் மூன்று நாள் இடைவெளியில் இந்த சேவை செயல்படவுள்ளது. ஜூலை 18, ஜூலை 20, ஜூலை 22, ஜூலை 25, ஜூலை 27, ஜூலை 29, ஆகஸ்ட் 1, ஆகஸ்ட் 3, ஆகஸ்ட் 5, ஆகஸ்ட் 8, ஆகஸ்ட் 10, ஆகஸ்ட் 15 என ஆடி மாதம் முடியும் வரை இந்த சேவையை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒவ்வொரு கோவிலுக்கும் மினி ஏசி பேருந்தில் அழைத்து செல்லப்படுவீர்கள். இதற்கான கட்டணம் ஆயிரத்து 400 ரூபாய் ஆகும்.
காலை 8.30 மணி அளவில் தஞ்ரை ரயில் நிலையம் அருகில் உள்ள ஹோட்டல் தமிழ்நாட்டில் வேன் புறப்படும். 9 மணிக்கு பெரிய கோவில், 10 மணிக்கு பங்காரு காமாட்சி அம்மன் கோவில், 10.45 மணிக்கு மகாமாரியம்மன் கோவில், 11.30 மணிக்கு கற்பரட்சாம்பிகை கோவில், 12.30 மணிக்கு துர்கை அம்மன் கோவில், 2.30 மணிக்கு வலங்கைமான் மகா மாரியம்மன் கோவில், 3.30 மணிக்கு நாகநாதசுவாமி கோவில், 4.15 மணிக்கு கும்பேஷ்வரர் கோவில், 5 மணிக்கு காசி விஸ்வநாதர் கோவில், 5.45 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் தரிசனம் முடித்து இரவு 8 மணி அளவில் மீண்டும் தஞ்சை ஹோட்டல் தமிழ்நாட்டில் இறக்கிவிடப்படுவீர்கள்.
அம்மன் கோவில்களில் சிறப்பு தரிசனம்
உங்களுடன் அரசு அதிகாரி உடனிருப்பதால் அம்மனை மிக நெருக்கத்தில் இருந்து தரிசிக்கலாம். ஒவ்வொரு கோவிலிலும் அரை மணி நேரம் தரிசனம் செய்ய வாய்ப்பு அளிக்கப்படுகிறது. மதியம் 1 மணி முதல் மதியம் 2 மணி நேரம் வரை சாப்பாட்டு நேரம். அரசு சார்பிலயே மதிய உணவு வழங்கப்படும். அதே போல கோவில்களில் பிரசாதமும் பெற்றுத் தரப்படும். முன்பதிவு செய்வதற்கு ஆதார் அட்டை உள்ளிட்ட அரசு அங்கீகரித்த அட்டைகளை பயன்படுத்தவும்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation