"தமிழ்நாடு இனி சிறக்கும், நாடெங்கும் கொடி பறக்கும்" த.வெ.க தலைவர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் தனது கட்சியின் அதிகாரப்பூர்வ கொடியை ஆகஸ்ட் 22ல் அறிமுகம் செய்து தலைமை நிலைய செயலகத்தில் ஏற்றி வைக்கிறார்.

tvk flag

தமிழக அரசியல் களத்தில் நுழைந்திருக்கும் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான தளபதி விஜய் தனது கட்சியின் கொடியை ஆகஸ்ட் 22ஆம் தேதி அறிமுகம் செய்து வைக்கிறார். GOAT படத்தை தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்க தயாராகி வரும் விஜய் இதனிடையே அரசியல் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். 2026 சட்டமன்ற தேர்தலை மையமாக செயல்பட்டு வரும் நிலையில் கட்சியின் முதல் மாநாட்டை நடத்துவதற்கான பணிகளும் முழுவீச்சில் நடைபெறுகின்றன. ஏற்கெனவே பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் கட்சியின் கொடியை தவெக தலைவர் விஜய் அறிமுகப்படுத்த இருக்கிறார். எப்போதும் தனது அறிவிப்பில் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களுக்கு என் ஆரம்பிக்கும் விஜய் இம்முறை கட்சி சார்ந்த அறிவிப்பு என்பதால் ரசிகர்களுக்கு பதிலாக தோழர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கையில் கம்யூனிஸமும் இடம்பெற்றுள்ளத்தை இந்த அறிவிப்பு உறுதிப்படுத்துகிறது.

என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே,

சரித்திரத்தின் புதிய திசையாகவும் புதிய விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைந்தால் அது ஒரு பெரும் வரம். அப்படியான வரமாக இறைவனும் இயற்கையும் நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கும் நாள் தான் 2024 ஆகஸ்ட் 22. நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அடையாளமான கொடி அறிமுகமாகும் நாள். தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப் போகும் வீரக் கொடியை, வெற்றிக்கொடியை நம் தலைமை நிலையச் செயலகத்தில் அறிமுகப்படுத்தி, கழகக் கொடிப் பாடல் வெளியிட்டு கழகக் கொடியை ஏற்றி வைக்கிறோம் என்பதை பெருமகிழ்வுடன் அறிவிக்கிறேன் என விஜய் தெரிவித்துள்ளார்.

நாடெங்கும் நமது கொடி பறக்கும் தமிழ்நாடு இனி சிறக்கும், வெற்றி நிச்சயம் போன்ற வாசகங்களும் அந்த அறிவிப்பில் இடம்பெற்றுள்ளன. சில நாட்களுக்கு முன் கொடியை ஏற்றி விஜய் ஒத்திகை பார்த்த நிலையில் ஆகஸ்ட் 22ஆம் தேதி அதிகாரப்பூர்வ கொடியினை வெளியிட்டு கம்பத்தில் ஏற்றி வைக்கிறார். தமிழக வெற்றிக் கழக்கத்தின் கொடியில் மஞ்சள், சிவப்பு ஆகிய நிறங்கள் இடம்பெறும் எனத் தெரிகிறது.

இந்த விழாவில் பங்கேற்க மாவட்ட செயலாளர்கள், முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் ஊடகத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் காவல்துறையினரிடம் அனுமதியும் பாதுகாப்பும் கோரப்பட்டுள்ளது. இந்த விழாவிலேயே கட்சியின் முதல் மாநாடு நடைபெறவுள்ள இடத்தை விஜய் அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது. விஜய்யின் அடுத்தடுத்த அரசியல் நகர்வு அரசியல்வாதிகளுக்கு கவலையை அதிகரித்திருக்கிறதோ இல்லையோ நிச்சயம் கோலிவுட் வட்டாரத்தில் கவலையை தந்துள்ளது. விஜய் நடிக்கும் படங்கள் கோடிக்கணக்கில் வியாபாரம் ஆகும் நிலையில் அவர் சினிமாவிற்கு முழுக்கு போட்டு அரசியலுக்கு செல்வது ரசிகர்கள், தயாரிப்பார்கள், விநியோகஸ்தர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த போகிறது.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP