ஒவ்வொருவருக்கும் இரும்புச்சத்து அவசியமான ஒன்று. ஆனால் கர்ப்ப காலத்தில் அதன் முக்கியத்துவம் மிகவும் அதிகமாக உள்ளது.
ஒவ்வொருவருக்கும் அவர்களின் உடல் சீராக இயங்குவதற்கு பல்வேறு முக்கியமான ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றன. இவற்றில் ஒன்று இரும்புச்சத்து. இரும்புச்சத்தின் உதவியுடன் தான் உடலில் ஹீமோகுளோபின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஹீமோகுளோபின் உடலில் ஆக்ஸிஜன் ஓட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலில் இரும்புச்சத்து இல்லாததால் போதுமான அளவு ஹீமோகுளோபின் உற்பத்தி செய்யப்படாவிட்டால், அதன் விளைவு உடலின் ஒவ்வொரு பகுதியிலும் தெரியும். அதுமட்டுமின்றி, கர்ப்ப காலத்தில் உடலுக்கு தேவையான இரும்புச் சத்தின் அளவு இன்னும் அதிகமாகும்.
கர்ப்பிணிப் பெண்ணின் உடலில் இரும்புச் சத்து குறைவாக இருந்தால், அது கர்ப்பிணிகளோடு சேர்த்து பிறக்கப்போகும் குழந்தையையும் பாதிக்கிறது. இந்த காரணத்திற்காக, கர்ப்ப காலத்தில் இரும்புச் சத்துக்களை எடுத்துக் கொள்ள மருத்துவர்கள் அடிக்கடி பரிந்துரைக்கின்றனர். எனவே இன்று இந்த பதிவில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு இரும்புச்சத்து ஏன் மிகவும் முக்கியமானது என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம்.
ஒவ்வொரு பெண்ணும் கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து நிறைந்த உணவை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த நேரத்தில் அவரது இரும்புச்சத்து தேவை அதிகரிக்கிறது. ஒரு பெண்ணுக்கு ஒரு நாளைக்கு சராசரியாக 15-18 மில்லிகிராம் இரும்புச்சத்து தேவைப்படுகிறது. அதே நேரத்தில், கர்ப்ப காலத்தில், ஒரு பெண்ணுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 27 மில்லிகிராம் இரும்புச்சத்து அவசியம். ஆனால் சராசரி கர்ப்பத்திற்கு, ஒரு பெண்ணின் உடலுக்கு சுமார் 1000 மில்லிகிராம் இரும்புச்சத்து தேவை. கரு மற்றும் நஞ்சுக்கொடிக்காக 350 மில்லிகிராம் இரும்புச்சத்து இழக்கப்படுகிறது. அதே வேளையில், பிரசவத்தின்போது வெளியாகும் இரத்தத்தில் 250 மில்லிகிராம் இரும்புச்சத்து வெளியேறுகிறது. தாயின் இரத்த சிவப்பணு நிறைக்கு சுமார் 450 மில்லிகிராம் இரும்புச்சத்தும் தேவைப்படுகிறது.
கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து குறைபாடு குழந்தையின் வளர்ச்சியில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். உண்மையில், கர்ப்ப காலத்தில் குழந்தையின் வளர்ச்சிக்கு இரத்தத்தை உருவாக்க கூடுதல் இரும்புச்சத்து தேவைப்படுகிறது. ஆனால் பெண்ணின் உடலில் இரும்புச்சத்து குறைபாடு இருந்தால், அது கருவின் வளர்ச்சியை நிறுத்தும். சில சமயங்களில் குறைப்பிரசவம் கூட ஏற்படலாம், இது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
உண்மையில், பெரும்பாலான பெண்கள் கர்ப்ப காலத்தில் சோர்வாக உணர்கிறார்கள். ஆனால் உடலில் இரும்புச்சத்து குறைபாடு இருந்தால், உடல்நிலை மோசமாகிவிடும். உண்மையிலேயே, இரும்புச்சத்து இல்லாததால், போதுமான அளவு ஹீமோகுளோபின் உற்பத்தி செய்யப்படுவதில்லை. இதனால் ஆக்ஸிஜனின் ஓட்டம் தடைபடுகிறது மற்றும் பிற உறுப்புகளின் செயல்பாடும் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக கர்ப்பிணி பெண் மிகவும் பலவீனமாகவும் சோர்வாகவும் உணரலாம். இரும்புச்சத்து குறைபாடு பெண்களுக்கு இரத்த சோகைக்கு வழிவகுக்கும்.
கர்ப்ப காலத்தில் பெண்கள் இரும்புச்சத்தை தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ளாமல் இருப்பது பொதுவான பிரச்சனையாக உள்ளது. இதனால் கர்ப்பிணி பெண் மீண்டும் மீண்டும் நோய்வாய்ப்படுகிறாள், இது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எதிர்மறையான விளைவையும் ஏற்படுத்துகிறது. இரும்புச்சத்து உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதன் மூலம் தொற்றுநோய்களைத் தடுக்க உதவுகிறது. ஆனால் உணவில் இரும்புச்சத்து குறைவாக இருந்தால், அது கர்ப்பிணி பெண்களை தொற்றுநோய்க்கு ஆளாக்குகிறது. இதுமட்டுமின்றி, இரும்புச்சத்து குறைபாடு காரணமாக, பதட்டமும், மன அழுத்தத்தமும் கர்ப்பிணிகளுக்கு உண்டாகும். இது கருவின் வளர்ச்சியை எதிர்மறையாக பாதிக்கும்.
எனவே இப்போது நீங்கள் இரும்புச்சத்து நிறைந்த உணவை சாப்பிடுங்கள். உணவியல் நிபுணர் அல்லது மகளிர் மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெற்று அவர்களின் ஆலோசனையின் பேரில் இரும்புச் சத்து குறைபாட்டை எளிதில் சமாளிக்கலாம்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Image Credit: freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]