2022ஆம் ஆண்டு பொங்கலின்போது சமூக வலைதளங்கள் எங்கும் அதிகம் பரவிய வீடியோக்களில் ஒன்று, ’பெண் என்பதற்காக தனக்கு வழங்கப்பட்ட ஆறுதல் பரிசை தூக்கி எறிந்த சிறுமி யோகதர்ஷினியின் வீடியோ.
ஜல்லிக்கட்டில் தன் காளை தோல்வியைத் தழுவியிருந்தும், இந்த சிறுமிக்கு பரிசு கொடுக்கலாம் என்று விழாக்கமிட்டி முடிவு செய்தது. ஆனால், பெண் என்பதற்காக இப்படி ஒரு ஆறுதல் பரிசு எனக்கு தேவையில்லை என்று சொல்லி தூக்கி எறிந்தார் சிறுமி யோகதர்ஷினி.
இதையடுத்து சமூக வலைதளங்களில் பாராடும் பகிர்வுமாக பிரபலமான, யோகதர்ஷினி இப்போது என்ன செய்கிறார் என்று தெரியுமா?
மதுரை மாவட்டம் ஐராவதநல்லூரைச் சேர்ந்த யோகதர்ஷினி, 18 வயதுக்கு குறைவானவர் என்பதால் அவரைப்பற்றி எழுதும் முன் பெற்றோரின் அனுமதி பெற வேண்டியது ஊடக அறம். எனவே, அவரது தந்தை முத்துவை தொடர்பு கொண்டது ஹெர்சிந்தகி தமிழ்.
அப்போது பேசிய அவர், “இப்போது பள்ளிக்கூடம் போயிருக்கிறார். வந்ததும் பேசச்சொல்கிறேன்.” என்றார்.
ஆம், தற்போது 12ஆம் வகுப்பு படித்து வரும் யோகதர்ஷினிக்கு சிறுவயது முதலே ஜல்லிக்கட்டு என்றால் கொள்ளைப் பிரியம். இரண்டு ஜல்லிக்கட்டு காளைகளையும் அவர் வளர்த்து வருகிறார்.
பெண் என்பதால் எப்போதும் போல இரண்டாம் நிலைதான். மாடுகளைப் பராமரிப்பது, வளர்ப்பது என எல்லா வேலைகளையும் செய்தாலும் மாட்டை ஜல்லிக்கட்டில் அவிழ்க்கும் இவரது ஆசைக்கு மட்டும் கதவுகள் திறக்கவேயில்லை.
ஜல்லிக்கட்டில் தங்கள் காளையைப் பங்கேற்க வைப்பது என்பதை மாடு அவிழ்ப்பது என்று சொல்வர். அதுவும் அந்தந்த குடும்பத்தின் ஆண்களின் பெயரில் நடைபெறுவது பெரும்பாலான நடைமுறை.
யோகலட்சுமியின் வீட்டிலும் முன்பு அதுதான் நடைமுறை. தாத்தா, அப்பா அண்ணன் என தொடர்ந்து ஆண்களின் பெயராலேயே காளைகள் அவிழ்க்கப்பட்டு வந்தது. தன் அப்பாவிடம் வாய்ப்புக் கேட்கும் வரை.
அப்படியாக, வாய்ப்புக் கேட்ட போது முதல்முதலாக காளை அவிழ்க்கக் கிடைத்தது சாக்குடி ஜல்லிக்கட்டில் தான். தொடர்ந்து ஜல்லிக்கட்டில் காளைகள் அவிழ்க்கும் வீரத்தமிழச்சி என்ற அடைமொழியுடன் வலம் வந்த யோகதர்ஷினிக்கு, டிஜிட்டல் உலகம் கைகொடுத்தது, கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டில் தான்.
இவரது காளை தோல்வியைத் தழுவிய நிலையில், பெண் என்பதால் இவருக்கு ஆறுதல் பரிசு அறிவிக்கப்பட, அதை வேண்டாம் என்று உதறித்தள்ளினார். இதைப் பாராட்டியும் பகிர்ந்தும் சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியாக ஒரே இரவில் சிங்கப்பெண் போஸ்டர்களுடன் சில்லறையை சிதற விட்டனர் நெட்டிசன்கள்.
“பெண் என்பதால் தானே ஆறுதல் பரிசு தரலாம் என்று முடிவு எடுத்தார்கள். இதேபோல ஒரு பையனுக்கு கொடுப்பார்களா? கொடுத்தார்களா? நானும் வென்றுவிட்டு பின்பே பரிசு பெற்றுக் கொள்கிறேன்” என்று கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார் யோகதர்ஷினி.
அப்படியானால், இந்த ஆண்டு பரிசை வெல்வாரா என்று இப்போதே பதிவுகள் உலவத் தொடங்கி விட்டன. இந்த நிலையில் அவரையே தொடர்பு கொண்டு ஆயத்தப்பணிகள் குறித்து அறிந்து கொள்ள விழைந்தோம்.
நம்மோடு பேசிய அவர், “கடந்த ஆண்டு எங்கள் மாடு பிடிபட்டதால் அதற்கு அறிவித்த ஆறுதல் பரிசை வேண்டாம் என்று மறுத்துவிட்டு, அடுத்த ஆண்டு வெற்றி பெற்று பரிசை வாங்கிக் கொள்வதாகக் கூறி வந்துவிட்டேன். இந்த ஆண்டும் அதே எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன்” என்று நம்பிக்கை பொங்கத் தெரிவித்தார்.
இந்த ஆண்டு வீரா கருப்பு என இரண்டு காளைகளைத் தயார் செய்துள்ளதாகவும், கடந்த ஆண்டு பிடிபட்ட காளை இந்த ஆண்டு வெல்ல வேண்டும் எனவும் கூறுகிறார்.
2023ஆம் ஆண்டில் சுமார் 9000க்கும் மேற்பட்ட காளைகள், ஏறக்குறைய 4000 வீரர்கள் என ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான பதிவுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில், “உலகப்புகழ் பெற்ற பாலமேடு, அலங்காநல்லூர், அவனியாபுரம் என மூன்று வாடிகளுக்குமே பதிவு செய்துள்ளோம். எந்த வாடிக்கு அனுமதி கிடைத்தாலும் காளையை அவிழ்ப்போம். இந்த ஆண்டு நிச்சயம் வெற்றி கிடைக்கும்” என்றும் தெரிவிக்கிறார் யோகதர்ஷினி.
காளைகள் வெல்லட்டும். அதேபோல யோகதர்ஷினி கல்வியிலும் வெல்ல ஹெர்ஷிந்தகி சார்பாக வாழ்த்துகள்.
நேயர்களே! அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள். பாரம்பரியமிக்க சூரிய வழிபாடு எல்லோருக்கும் சமத்துவ வளம் வழங்கட்டும்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation