herzindagi
pilotHZ ()

Women's Day Special: பயத்தை வெளிக்காட்டாமல் எப்படியோ லேண்ட் ஆகிட்டேன்.. மறக்க முடியாத தருணம் அது!

விண்ணில் பறக்க பெண்களுக்கு சிறகுகள் வேண்டாம் லட்சியம் போதும் என்று சாதித்துக் காட்டிய பெண் பைலட் ஜெயஸ்ரீயுடன் ஒரு சிறப்பு நேர்காணல்.
Editorial
Updated:- 2024-03-30, 09:09 IST

மகளிர் தினத்தை முன்னிட்டு நீலகிரியை சேர்ந்த பெண் பைலட் ஜெயஸ்ரீ உடன் ஒரு சிறப்பு நேர்காணல். இவர் படுகர் சமுதாயத்தின் முதல் பெண் விமானி என்ற பெருமையை பெற்றவர். 

பெண்கள் பைக் ஓட்டக்கூடாது, பஸ் ஓட்டக்கூடாது என்று கூறும் இந்த சமூகத்தில் விமானம் ஓட்ட வேண்டும் என்ற கனவு எப்படி துவங்கியது?

பைக் ஓட்டுவது, ஆட்டோ ஓட்டுவது அல்லது பஸ் ஓட்டுவது போல விமானம் ஓட்டுதல் அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. விமானம் பொருத்தவரையில் ஆண்கள் ஒட்டி விட முடியுமா என்று கேட்டால் இல்லை, ஆணாக இருக்கட்டும் இல்லை பெண்ணாக இருக்கட்டும் அதிக அளவு திறமை இருந்தால் மட்டுமே இந்த பணியில் சேர முடியும். சின்ன வயசில் டாக்டர் ஆகலாமா? இன்ஜினியர் ஆகலாமா? டீச்சர் ஆகலாமா? என்று என் அம்மாவிடம் நான் கேட்டபோது நீ பைலட் கூட ஆகலாம் என்று சொல்லிக் கொடுத்தது என் அம்மா தான். கோத்தகிரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நான் பள்ளி படிப்பை முடித்தேன். அதற்குப் பிறகு கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்தேன். சில ஆண்டுகள் ஐடி துறையில் வேலை செய்து வந்தேன். 2020 ஆம் ஆண்டு கொரோனாக்குப் பிறகு நான் ஆபீஸ் சென்று வேலை செய்வது குறைந்து, வீட்டில் இருந்தே வேலை செய்ய ஆரம்பித்தேன். அப்போது என்னால் வீட்டில் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்யவே முடியவில்லை. இது எனக்கான இடமில்லை என்று அடிக்கடி தோணும்.

pilot jayashree

அப்போதுதான் நம் வாழ்க்கையில் அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்று கேள்வி எனக்குள் இருந்தது. அந்த கொரோனா காலகட்டத்தில் வீட்டில் இருந்தபடியே விமானியாக என்னால் முடிந்த எல்லா முயற்சியும் எடுக்க ஆரம்பித்தேன். இந்த விமான பயிற்சியில் பல எழுத்துத் தேர்வு இருக்கும். நான் ஒரு பக்கம் என்னுடைய ஐடி வேலையை செய்து கொண்டே இன்னொரு பக்கம் தேர்வுகளுக்கு தயாரானேன். சில மாதங்களுக்குப் பிறகு ஒரு கட்டத்தில் என் ஐடி வேலையை ராஜினாமா செய்து விட்டு முழு மனதாக விமான பயிற்சியில் இறங்கினேன். இந்த விமான பயிற்சியில் எழுத்து தேர்வுகளை பாஸ் செய்த பிறகு உடல் பரிசோதனை இருந்தது. அதிலும் தேர்வு ஆனேன். 

 

 

 

View this post on Instagram

A post shared by Jayashree MM (@jayashree_mm)

அப்பா அம்மா ஆதரவு இருந்துச்சா? உங்க உறவினர்கள் என்ன சொன்னாங்க?

எங்க படுகர் சமுதாயத்தில் பக்கத்து மாவட்டத்துக்கும் மாநிலத்துக்கும் பெண்களை படிக்க அனுப்பவே பெற்றோர்கள் பலரும் அதிகம் தயங்குவார்கள். இந்த சூழலில் இந்தியாவை விட்டு வெளியே மற்றொரு நாட்டுக்கு விமான பயிற்சி பெறுவதற்கு என்னை தைரியமாக அனுப்ப என் பெற்றோர் அதிக ஆதரவாக இருந்தனர். என் அம்மா அப்பா தான் எனக்கு முதல் ஆதரவு என்று கூட சொல்லலாம். என் உறவினர்கள் பலரும் ஒரு பெண் குழந்தைக்கு இவ்வளவு செலவு தேவையா என்று கேள்வி கேட்டனர். இன்னும் சிலர் இவ்வளவு பணம் செலவு செய்து வேலைக்கு அனுப்புவதற்கு பதிலாக கல்யாணம் செய்து அனுப்பி விடலாமே என்றுக் கூட கூறினர். அப்போது என் அப்பா இத்தனை லட்சம் செலவு செய்து கல்யாணம் செய்யலாம் என்றால், அதே பணம் செலவு செய்து ஏன் என் மகளை நான் படிக்க வைக்க கூடாது என்று கேள்வி கேட்டார். உண்மையில் என் அப்பா எனக்கு இவ்வளவு ஆதரவாக இருப்பார் என்று நான் நினைத்ததே இல்லை. நான் இன்று கனடாவில் விமான பைலட் ஆக இருப்பதற்கு முதலும் முக்கிய காரணமும் என் அம்மா அப்பா தான்.

விமான பயிற்சியில் நீங்கள் சந்தித்த சவால்கள் என்ன? 

pilot

முதலில் நான் தமிழ்நாட்டை தாண்டி எங்கேயும் சென்றதே இல்லை. சொல்லப்போனால் ஐடியில் வேலை செய்து கொண்டிருக்கும் போது கூட கோயம்புத்தூரில் வேலை கிடைத்த போது வார இறுதி நாட்களில் வீட்டிற்கு செல்வேன். அப்படி இருந்த எனக்கு முதல் முறை இந்தியாவை தாண்டி தென்னாப்பிரிக்காவில் 2023 ஆம் ஆண்டு தனியாக சென்று விமான பயிற்சி மேற்கொண்டது பெரிய சவால் தான். அந்த நாட்டின் கிளைமேட், கலாச்சாரம், உணவு பழக்க வழக்கம் எல்லாமே எனக்கு புதுசா இருந்துச்சு. எனக்கு தென் ஆப்பிரிக்காவில் ஒரு அக்கா இருந்தாங்க, ஆனால் அவங்களும் ரொம்ப தூரமான இடத்தில் இருந்தாங்க. இருந்தாலும் நமக்கு தெரிஞ்ச யாரோ ஒருத்தர் இந்த நாட்டில் இருக்கிறார்கள் என்ற தைரியம் எனக்கு எப்பவுமே இருந்தது. ஆறு மாத காலம் தென்னாப்பிரிக்காவில் விமான பயிற்சியில் பல சவால்களை சந்தித்தேன். அந்த நாட்டில் இருக்கும் ஒரு பெரிய சவால் என்னவென்றால் அடிக்கடி கரண்ட் கட் செய்யப்படும். இது லோட் ஷெட்டிங் என்று கூறப்படுகிறது. குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 12 முதல் 16 மணி நேரம் பவர் கட் ஆகும். ஒரு வேலை நீங்கள் தங்கி இருக்கும் இடத்தில் சோலார் பேனல் இருந்தால் பரவாயில்லை. சில நேரங்களில் தண்ணீர் தட்டுப்பாடு கூட இருக்கும். எனக்கு ரொம்ப பிடித்த விமானத்தை ஓட்ட போகிறோம் என்ற சந்தோஷம் அதிகமாக இருக்கும் போது இந்த சவால்கள் எனக்கு பெரிதாக தெரியவே இல்லை என்று தான் சொல்லணும்.

மறக்க முடியாத மகிழ்ச்சியான  தருணம்?

jayshree  ()

ஒரு தருணம் என்று சொல்ல முடியாது. இந்த விமான பயிற்சியில் எனக்கு மறக்க முடியாத இரண்டு மகிழ்ச்சியான தருணம் இருக்கு. என் முதல் விமானம் தான் என்னுடைய மறக்க முடியாத ஒரு மகிழ்ச்சியான தருணம். விமான பயிற்சியில் இருக்கும் போது தனியாக விமானத்தை எடுத்து ஓட்டி செல்ல விடுவார்கள். இதனை 'ஃபர்ஸ்ட் சோலோ' என்று கூறுவார்கள். நான் முதல்முறையாக ஃபர்ஸ்ட் சோலோ சென்றபோது அந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் அளவிட முடியாது. என் அப்பாவுக்கு மட்டும் அப்போது வாட்ஸ் ஆப்பில் ஒரு மெசேஜ் அனுப்பி விட்டு ஃபர்ஸ்ட் சோலோ சென்றேன். அவர் என்ன ரிப்ளை செய்தார் என்று கூட நான் திரும்பி வந்து தான் பார்த்தேன். அவ்வளவு எதிர்பார்ப்புடன் காத்திருந்த ஒரு தருணம் அது. இன்னொரு மறக்க முடியாத தருணம், பொதுவாக கிளைமேட் சரியாக இல்லாத போது விமானம் ஓட்டி செல்ல அனுமதிக்க மாட்டார்கள். ஒரு நாள் நான் தனியாக சோலோ சென்றபோது திரும்பி வரப்போ கிளைமேட் கொஞ்சம் பிரச்சனை ஆகிவிட்டது. என்ன செய்வதென்று தெரியாமல் பயந்தாலும், எப்படியாவது விமானத்தை பத்திரமாக லேண்ட் செய்ய வேண்டும் என்று மட்டும் தான் யோசித்தேன். பதட்டத்தை வெளி காட்டாமல் எப்படியோ லேண்ட் ஆகி விட்டேன். இது ஒரு மறக்க முடியாத தருணம் என்று கூட சொல்லலாம்.

உங்களை இன்ஸ்பையர் செய்த பெண்? 

என்னுடைய பெற்றோர்கள் தான் எனக்கு முதல் ரோல் மாடல். என் அம்மா, அப்பா ரெண்டு பெரும் ரொம்ப ஸ்ட்ராங். என்ன எப்போதும் மோட்டிவேட் பண்ணுவாங்க. இது மட்டும் இல்லாம நான் வெளியில் பார்க்கிற பெண்கள், நான் பேசுற பெணகள் என எல்லாரிடமும் இருந்து ஏதாவது ஒரு விஷயத்தில் இன்ஸ்பையர் ஆகுவேன். 

சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு சில வார்த்தைகள்?

பெண்கள் பலருக்கும் பெரிய கனவுகள் இருக்கு. சிலர் பாதி கடலை தாண்டிய பிறகு பின் வாங்கி விடுவார்கள். உங்களுக்கு ஒரு விஷயம் வேண்டும் என்றால் நீங்கள் இறங்கி வேலை செய்யவேண்டும். கனா பட டயலாக் மாதிரி தான் " உனக்கு ஒரு விஷயம் வேணும்னா அடம் பிடிக்கணும், நீ பிடிக்கிற அடத்துல தான் உனக்கு அந்த விஷயம் எவ்வளவு முக்கியம்னு தெரியும்" . என்ன ஆனாலும் சரி கடைசி வரைக்கும் உங்களுக்கு பிடித்த விஷயத்துக்காக போராட வேண்டும். கிடைக்குதோ இல்லையோ முயற்சி செய்ய வேண்டும். முயற்சி கூட செய்யவில்லையே என்று பிற்காலத்தில் வறுத்த படக்கூடாது.

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]