“பிச்சை எடுப்பாங்க” இந்த கருத்தை உடைக்கணும் - ஒரு திருநங்கை எழுத்தாளரின் நேரடி பதிப்பு அனுபவம்

சென்னை புத்தக கண்காட்சியில் முதல்முறையாக திருநர்களுக்காக அமைக்கப்பட்ட அரங்க அனுபவம் குறித்து திருநங்கை கிரேஸ் பானுவின் நேரடிப் பதிவு.

HZ Big

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 46 ஆம் ஆண்டு புத்தகக் கண்காட்சியை, ஆயிரம் புத்தக அரங்குகளை அமைத்து அறிவுப் பரப்பலை மிகப் பிரமாண்டமாக நடத்தி முடித்திருக்கிறது. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகாலம் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த அறிவுப் பரப்புரைத் திடலில் இந்த ஆண்டு முதல் முறையாக திருநர் என்றழைக்கப்படும் திருநங்கைகள்,திருநம்பிகளும் மற்றும் பால் புதுமையினரும் இணைந்து, ``குயர் பப்ளிஷிங் ஹவுஸ்’’ எனும் புத்தக அரங்கை அமைத்து, அறிவுப் பரப்புரை இயக்கத்தில் இணைந்தோம். இச்செய்தியை கேள்விப்பட்டு இந்தியா முழுவதும் உள்ள திருநர்களும் பால் புதுமையினரும் எங்களை தொடர்பு கொண்டு அவர்களின் படைப்புகளை அனுப்பி வைத்தனர்.பல்வேறு பதிப்பகங்களில் விளம்பரப்படுத்தப்படாமல் தூசி படிந்து சிதறிக்கிடந்த திருநர் மற்றும் பால் புதுமையினரின் படைப்புகள் எங்கள் அரங்கை தேடி வந்து ஒரே இடத்தில் குழுமி அழகழகாய் காட்சி படுத்தின.

May be an image of 4 people

பொதுச் சமூகத்துக்கும் எங்களுக்குமான இடைவெளி அறிவுப் பரப்பல் இயக்கத்திலும் நீளுமோ என ஒரு அச்ச உணர்வோடே முதல் நாளை தொடங்கினோம்.பழமையான புரிதலின் அடிப்படையில் சிலர் எங்களை அணுகினாலும் பொதுச் சமூகத்தின் அறிவுத் தளம் எங்கள் அரங்கை வாரி அணைத்து பாலின இடைவெளியை அன்பால் இட்டு நிரப்பியது.

முன்னதாக இந்த புத்தகக் கண்காட்சியில் அரங்கம் கிடைப்பதற்கே சமூக ஊடகங்களின் மூலமும் அரசுக்கு மனுக்கள் மூலமும் போரட வேண்டிய சூழல் இருந்தது. இது குறித்து நம் ஹெர்ஸிந்தகி தளத்துடன் நடைபெற்ற உரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளக்கியிருந்தார் கிரேஸ் பானு.

காணொளியைப் பார்க்க


பல்வேறு அச்சு,காட்சி ஊடகங்களும் நாங்கள் அமைத்த அரங்கினை குக்கிராமங்களுக்கும் கொண்டுச் சென்றன.`தி இந்து தமிழ் திசை’ஊடக அறத்தோடும் அன்போடும் எங்கள் அரங்கை பற்றிய செய்திகளை மக்களிடம் கொண்டு சென்றதானது எந்நாளும் எங்கள் சமூகத்தின் நினைவுகளிலிருந்து நீங்கா செய்திகளாயின. எங்கோ சமூகத்தின் இடுக்குகளில் அடைபட்டுக் கிடந்த திருநர் சமூகமும் பால் புதுமையினரும் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் இந்த காலைப் பொழுதில் உலாவத் தொடங்கியிருக்கிறார்கள்.எதிர்படுபவர்களைக் கண்டு நாங்கள் அஞ்சிய காலம் மெல்ல மெல்ல மங்கி வருகிறது.எதிர்படுபவர்கள் இப்பொழுது சிறு புன்னகையை சிந்துகிறார்கள்.இந்த புன்னகை எங்களுக்கான ஆற்றலை மேலும் கூட்டுகிறது.இந்த புன்னகை அடைபட்டுக் கிடக்கும் எங்கள் சமூகத்தை லட்சியத்தை நோக்கி அழைக்கிறது.நாங்கள் அமைத்த புத்தக அரங்கத்தில் அலையலையாய் எங்கள் அரங்கினுள் நுழைந்து வாசகர்கள் பொழிந்த அன்பு எப்பொழுதும் உலராத ஒன்று. வரலாற்றில் புறவயச் சூழல்கள் சாதகமாக அமையும் போது தான் பாதிக்கப்படும் மக்கள் திரளின் தேவைகள்,கோபங்கள்,கோரிக்கைகள் உலகத்தின் முன்னால் போராட்டமாகவும் இலக்கியமாகவும் அரங்கேறுகின்றன.
வெள்ளை இனவெறியை எதிர்த்த கருப்பினத்தவர்களின் போராட்டமும் இலக்கியமும் நானயத்தின் இரு பக்கங்களாக சென்ற நூற்றாண்டின் மத்திய காலத்தில் வெளிப்பட்டது. தலித் மக்களின் சாதி எதிர்ப்பு சென்ற நூற்றாண்டின் கடைசியில் போராட்டமாகவும் இலக்கியமாகவும் வெளிப்பட்டது. அது போலவே திருநர் மக்களின் கோரிக்கைகளும் இலக்கியங்களும் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் வெளிவரத் தொடங்கியுள்ளன. ``திருநர்களுக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இடப்பங்கீடு வழங்குங்கள்’’ என்ற பதாகயை உயர்த்தி திருநர்கள் என்றால் கை தட்டி பிச்சை கேட்பார்கள், அராஜகம் செய்வார்கள் எனும் பிற்போக்கான கருத்தாக்கத்தை உடைக்க நினைக்கிறோம். எங்கள் சமூகத்தை பிச்சையீட்ட தள்ளியது குடும்ப,சமூக,அரச தீண்டாமைகளே என்பதை களங்களில் முழக்கங்களாகவும் புத்தக அரங்கில் இலக்கியங்களாகவும் நாங்கள் காட்சிப்படுத்த விழைகிறோம். இதுவரையில் வலிகளை மட்டுமே பேசுவதாய் இருந்த எங்கள் இலக்கியம் அரசியல்,அறிவியல் என பரிணமிக்கிறது. எங்கள் சமூகத்திலிருந்து இளம் எழுத்தாளர்கள் அவற்றை படைத்துக் கொண்டிருக்கிறார்கள்.அடுத்த ஆண்டு அறிவுப் பரப்பல் நாட்களில் நிறைய புதிய சிந்தனைப் படைப்புகளை `குயர் பப்ளிஷிங் ஹவுஸ்’காட்சிப்படுத்தும். அப்பொழுதும் இப்பொழுதுப் போலவே உங்களின் புன்னகையும் அன்பும் எங்கள் நுழைந்து, எங்கள் சமூகத்தை ஊக்கப்படுத்தும் என நினைக்கிறேன்.


கட்டுரையாளர்

கிரேஸ் பானு எழுத்தாளர், திருநர் சமூக செயல்பாட்டாளர்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP