herzindagi
sudha kongara movies

Women's Day Special: பெண்மைக்கு பெருமை சேர்த்த இயக்குனர் சுதா கொங்கரா!

மகளிர் தினத்தை முன்னிட்டு திரைத்துறையில் பல தேசிய விருதுகளை குவித்த பெண் இயக்குனர் சுதா கொங்கராவின் திரை பயணம் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
Editorial
Updated:- 2024-09-15, 21:04 IST

தமிழ் சினிமாவில் உருவாகும் திரைப்படங்களை பொருத்தவரை பல வகையான சுவாரசியமான கதை களங்கள் இருக்கும். என்னதான் பொழுதுபோக்கிற்காக திரைப்படங்கள் பார்த்தாலும் அவை பொதுவாக ஒரு நல்ல கருத்துள்ள படமாக இருப்பதை தான் ரசிகர்கள் அதிகம் விரும்புகின்றனர். சமீப காலங்களில் இத்தகைய திரைப்படங்களை உருவாக்கிய ஓர் பெண் இயக்குனர் சுதா கொங்கரா. 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரை உலகில் பணியாற்றி வந்த இயக்குனர் சுதா கொங்கரா 2016 ஆம் ஆண்டு இறுதி சுற்று திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு பிரபலமானார். 

iruthi sutru ()

இவர் ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினத்தில் பிறந்தாலும் தமிழ்நாட்டில் உள்ள சென்னையில் தான் வளர்ந்தார். ஒரு திரைக்கதை எழுத்தாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய இயக்குனர் சுதா கொங்கரா, 'மை பிரண்ட்' என்ற இந்திய ஆங்கில திரைப்படத்திற்காக சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான தேசிய விருதை வென்றார். இதற்குப் பிறகு அவர் இயக்குனர் மணிரத்தினம் உடன் உதவி இயக்குனராக பணிபுரிய துவங்கினார்.  இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான 'பகல் நிலவு' திரைப்படத்தை பார்த்த பிறகு தான் இவர் இயக்குனர் மணிரத்தினம் உடன் உதவி இயக்குனராக சேர்ந்ததாக பல நேர்காணல்களில் இவர் கூறியுள்ளார். இயக்குனர் சுதா, மணிரத்தினம் இயக்கத்தில் சுமார் ஆறு வருடங்கள் பயணித்துள்ளார். யுவா, ஆயுத எழுத்து போன்ற திரைப்படங்களில் இவர் உதவி இயக்குனராக  பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. 

2008 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் 'ஆந்திரா அண்டகாடு' என்ற திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்கினார். இந்த திரைப்படம் பெரிதும் ஹிட் கொடுக்காத நிலையில்,அடுத்த இரண்டு ஆண்டுகளில் 2010 ஆம் ஆண்டு நடிகர் ஸ்ரீகாந்த், நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் துரோகி என்ற தமிழ் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படமும் இயக்குனர் சுதா கொங்கரா நினைத்த அளவுக்கு ஹிட் கொடுக்கவில்லை.

sudha

துரோகி என்ற தமிழ் படம் வெளியாகி ஆறு வருடங்கள் கழித்து இயக்குனர் சுதா கொங்கரா இறுதி சுற்று திரைப்படத்தை இயக்கினார். இந்தத் திரைப்படம் ஒரு பெண்ணின் சவால்களையும் சாதனையையும் அழகாக எடுத்து கூறிய ஒரு திரைப்படம். நடிகர் மாதவன் பாக்சிங் கோச்சாக நடிக்க, நடிகை ரித்திகா சிங் கதாநாயகியாக நடித்திருப்பார். இது பாக்சிங் விளையட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம்.  இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் திரைப்படமாக மாறியது. தமிழ் திரை உலகில் இறுதி சுற்று திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு அடுத்த வருடம் தெலுங்கு சினிமாவிலும் இந்த திரைப்படம் குரு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு ரிலீசானது. இதில் நடிகர் மாதவனுக்கு பதிலாக பாக்சிங் கோச் ஆக தெலுங்கு பிரபல நடிகர் வெங்கடேஷ் நடித்திருந்தார்.

sudha kongara

இந்த திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் சுதா கொங்கரா அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியான புத்தம் புது காலை என்ற குறும்படம் மூலம் மீண்டும் பிரபலமானார். இதற்கு பிறகு 2020 ஆம் ஆண்டில் கேப்டன் ஜி.ஆர் கோபிநாத் கதையை மையமாக வைத்து இவர் இயக்கிய திரைப்படம் சூரரை போற்று. இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா, நடிகை அப்பர்ணா முரளி முக்கிய வேடங்களில் நடித்திருக்க, ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். நெடுமாறன் ராஜாங்கம் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா தனது அதிரடி நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அதே போல நடிகை அபர்ணாவும் பொம்மி கதாபாத்திரத்தில் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி பல பெண்களின் ரோல் மாடலாக மாறினார். எதிர்பாராத அளவிற்கு இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ் ரசிகர்கள் மட்டுமின்றி உலகெங்கும் உள்ள சினிமா ரசிகர்கள் இந்த திரைப்படத்தை போற்றி கொண்டாட ஆரம்பித்தனர். சூரரை போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகள் பெற்றது குறிபிடித்தக்கது. சூரரைப் போற்று திரைப்படம் இயக்குனர் சுதா கொங்கரா சினிமா வாழ்க்கையில் ஒரு முக்கிய மைல் கல்லாக மாறிவிட்டது என்று கூட சொல்லலாம்.

"நான் சினிமா துறைக்கு செல்வதில் முதல் எதிர்ப்பை தெரிவித்தது என் குடும்பம் தான். எனக்கு 20 வயதில் திருமணம் ஆனது. திருமணத்திற்கு பிறகு கணவரிடம் என்னுடைய ஆசையை சொன்ன போது அவர், உனக்கு என்ன விருப்பமோ அதைச் செய் என்று சொன்னார்" என்று ஒரு சமீபத்திய நேர்காணலில் இயக்குனர் சுதா கொங்கரா கூறியுள்ளார். திரைத்துறையில் சாதிக்க நினைக்கும் பெண்கள் பலருக்கும் இயக்குனர் சுதா கொங்கரா என்றும் ஒரு சிறந்த ரோல் மாடலாக இருப்பார்.

Image source: google

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]