பொங்கல் பண்டிகையையொட்டி தமிழில் ஜனவரி 10ஆம் தேதி வெளியான திரைப்படம் வணங்கான். பாலா இயக்கத்தில் அருண் விஜய் கதாநாயகனாக இப்படத்தில் நடித்துள்ளார். 300க்கும் அதிகமான திரையரங்குகளில் வணங்கான் வெளியாகியுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இயக்குநர் பாலாவிற்கு வணங்கான் திருப்புமுனையாக அமைந்துள்ளதா அல்லது வர்மா, நாச்சியார், தாரை தப்பட்டை வரிசையில் இணைந்துள்ளதா என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
வணங்கான் கதைச்சுருக்கம்
சமூகத்தில் மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் அவலங்கள் குறித்து படம் பேசுகிறது.
வணங்கான் விமர்சனம்
சுனாமியில் குடும்பத்தை இழந்த மாற்றுத்திறனாளி அருண் விஜய் அனாதையான ரிதாவை தங்கையாக தத்தெடுத்து வளர்க்கிறார். அண்ணன் - தங்கை பாசம் ரசிக்கும்படி உள்ளது. அருண் விஜய், ரிதா கதாபாத்திரங்கள் ஒட்டுமொத்த படத்தையும் சுமக்கின்றன. கடும் கோபக்காரரான அருண் விஜய் மாற்றுத்திறனாளிகளுக்கு நிகழ்ந்த அநீதிக்காக மூன்று கொலை செய்கிறார். கொலையை ஒப்புக்கொண்ட பிறகு அருண் விஜய் - ரிதா உறவு என்ன ஆனது ? அருண் விஜய்க்கு தண்டனை கிடைத்ததா என்பதே வணங்கான்.
வணங்கான் படத்தின் பாஸிட்டிவ்ஸ்
- அருண் விஜய் ஜோடியான ரோஷினி பிரகாஷின் நடிப்பு பிதாமகன் லைலாவை நமக்கு நினைவூட்டுகிறது.
- இரண்டாம் பாதியில் மிஷ்கின், சமுத்திரக்கனி கதாபாத்திரங்கள் மிகக் கச்சிதம்.
- திருவள்ளூவர் சிலை, விவேகானந்தர் நினைவு மண்டபம், முக்கியமான வழிபாட்டு தலங்கள் என கன்னியாகுமரியின் அழகை திரையில் நன்றாக காட்சிப்படுத்தியுள்ளனர்.
- ஆங்காங்கே வரும் டைமிங் காமெடிகள் சில விநாடிகளுக்கு நம்மை சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கின்றன.
- மாற்றுத்திறனாளிகளுக்கு நடக்கும் அநீதியை திரையில் உரக்கச் சொல்லி நம்மை கண் கலங்க வைத்திருக்கிறார் பாலா.
- ஜி.வி.பிரகாஷின் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு வலு சேர்க்கின்றன.
வணங்கான் படத்தின் நெகட்டிவ்ஸ்
- தான் நினைப்பதே சரி என்ற எண்ணத்தில் பாலா எடுத்திருக்கும் மற்றொரு படம் தான் இந்த வணங்கான்.
- ஆரம்பத்தில் மூன்றாம் பாலினத்தவரை அசிங்கப்படுத்தும் நபர்களை அருண் விஜய் புரட்டி எடுக்கிறார். சில நிமிடங்கள் கழித்து அதே மூன்றாம் பாலினத்தவர் காசு வாங்குவது போல் காண்பிக்கின்றனர். இந்த காட்சி அவர்களை இழிவுபடுத்தும் வகையில் இருந்தது.
- வணங்கான் படத்தை 1 மணி நேரத்திற்குள் கூட முடித்திருக்க முடியும். ஏனெனில் முதல் பாதியின் இடைவேளை காட்சி வரை படத்தின் கதை என்னவென்றே நமக்கு தெரியவில்லை.
- கொலைக்கான காரணத்தை காவல்துறையால் நேரடியாக கண்டுபிடிக்க முடியாவிட்டாலும் அருண் விஜய் தான் கொலை செய்தார் என்பதை நிரூபிக்க ஒரு தடயவியல் ஆதாரம் கூட கிடைக்காதது போல் அப்பட்டமாக படம் எடுத்துள்ளனர்.
- எல்லாம் நன்றாக முடியும் நேரத்தில் எதற்காக படத்தில் சோகமான கிளைமேக்ஸ் ?
- 10 நிமிடத்தில் முடியக்கூடிய கதையை பாலாவால் மட்டுமே 2 மணி நேர படமாக எடுக்க முடியும்.
வணங்கான் ரேட்டிங் - 2.5/5
வணங்கானின் ரிசல்ட்டை அன்றே கணித்த சூர்யா பாலாவிடம் இருந்து லாவகமாக தப்பித்துக் கொண்டார். பாலாவின் படைப்புகள் பற்றி தெரிந்தும் அவரிடம் இருந்து தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போது தப்பிக்க போகிறார்கள் எனத் தெரியவில்லை.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation