நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்த அன்னபூரணி திரைப்படம் கடந்த 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சமையல் கலைஞராக நயன்தாரா நடித்துள்ளார். ஸ்டார் நடிகர்கள் எப்போதும் 25, 50, 75, 100ஆவது படங்களில் நடிக்கும் போது மிகவும் கவனமாக இருப்பார்கள். ஏனென்றால் மற்ற படங்களைப் போல இவை எளிதில் மறைந்துவிடாது. திரையுலக பயணத்தில் நயன்தாராவுக்கு அன்னபூரணி 75ஆவது படமாகும். இதில் அவர் முத்திரை பதித்தாரா என்பதை விமர்சனத்தின் இறுதியின் ஒன் லைனாக எழுதிகிறேன்.
சிறு வயதில் இருந்தே உணவைச் சமைப்பதிலும் ருசிப்பதிலும் ஆர்வம் கொண்டவராக இருக்கும் பிராமணப் பெண் நயன்தாராவுக்கு இந்தியாவின் சிறந்த செஃப்பாக வேண்டும் என ஆசை. சத்யராஜை ரோல் மாடலாக எடுத்துக் கொண்டு சமையல் கற்கிறார். இளங்கலை படிப்பு வரை நயன்தாராவின் ஆசைகளை நிறைவேற்றும் அவரது குடும்பம் , அவர் கேட்டரிங் படிக்க அனுமதி கேட்கும் போது சில காரணங்களைக் கூறி தடுக்கிறது.
எம்பிஏ படிக்கப் போவதாகக் கூறி விட்டுத் திருச்சி செல்லும் நயன்தாரா தனது லட்சியத்தை அடைய கேட்டரிங் கல்லூரியில் சேருகிறார். அங்கு அவருக்கு அசைவம் சமைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. தடுமாற்றம் அடையும் நயன்தாராவுக்கு ஜெய் அறிவுரை கூறுகிறார். குடும்பம் தன் மீது காட்டிய அன்பை லட்சியத்திற்காகத் துடைதெறிந்து அசைவத்தை சமைக்கவும் , ருசிக்கவும் ஆரம்பிக்கிறார் நயன்தாரா.
மேலும் படிங்க பருத்திவீரன் பிரச்சினையில் மிக்சர் சாப்பிடுகிறாரா சூர்யா ? - ரசிகர்கள்
இடைவேளை வரும்போது ஏதாவது ஒரு ட்விஸ்ட் வைப்பது தானே தமிழ் சினிமாவின் வழக்கம். அதைத் தான் இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராகப் பணிபுரிந்த நிலேஷ் கிருஷ்ணாவும் செய்துள்ளார். நயன்தாரா கேட்டரிங் படித்துக் கொண்டிருப்பதை அவரது குடும்பம் தெரிந்து கொள்கிறது. கல்லூரி படிப்புக்கு மூட்டைக் கட்டும் நயன்தாரா அதன் பிறகு என்ன செய்கிறார் என்பதே இரண்டாம் பாதி.
இரண்டாம் பாதியில் சத்யராஜிற்கு சொந்தமான நட்சத்திர ஹோட்டலில் வேலை தேடி சென்னை வருகிறார். அங்கு அவருக்குச் சத்யராஜின் மகன் கார்த்தி குமாருடன் மோதல் ஏற்படுகிறது. எனினும் சத்யராஜிற்கு பிடித்தமான உணவைச் சமைத்து ஹோட்டலில் சேர்ந்துவிடுகிறார். கார்த்தி குமாரின் குழந்தைத்தனமான வில்லத்தனத்தையும் மீறி நயன்தாரா பாராட்டுகளைப் பெறுகிறார். அப்போது எதிர்பாராதவிதமாக நயன்தாராவுக்கு விபத்து ஏற்படுகிறது. இதையடுத்து நடைபெறும் இந்தியாவின் சிறந்த செஃப் போட்டியில் கலந்துகொள்ளும் நயன்தாரா அதில் வெற்றி பெற்று தனது லட்சியத்தை அடைந்தாரா என்பதே மீதி கதை.
படத்தில் நயன்தாரா, சத்யராஜ், அச்யுத் குமார், கார்த்தி குமார் ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களில் கச்சிதமாக நடித்துள்ளனர்.
காமெடி, பாடல்கள், பின்னணி இசை என எதுவும் படத்துடன் ஒட்டவில்லை. மோட்டிவேஷன் கதையில் தனிநபரின் உணவுக்கான உரிமை பற்றி தேவையில்லாமல் திணிக்க முயற்சித்து இருக்கிறார் நிலேஷ் கிருஷ்ணா. மாமிசமும் சமைக்க தெரிந்தால் மட்டுமே ஒரு நபர் செஃப்பாக வேண்டும் என்று யாரோ நிலேஷ் கிருஷ்ணாவிடம் கூறியது போல் தெரிகிறது. சைவ செஃப்பகள் நாட்டில் இல்லையா ? இறுதிக் காட்சியில் பிரியாணி சமைப்பதற்கு முன்பாக நயன்தாராவை டோட்டல் கிரிஞ்சாக்கி விட்டனர். எந்த போட்டியாக இருந்தாலும் சரி அதில் ஒருவரின் மதத்திற்கு இடம் கிடையாது. அவரது திறமையே வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும். சில காட்சிகளில் அவ்வப்போது வரலாற்று கதைகளைக் கூறுகின்றனர். அதில் உண்மை உள்ளதா என்பது இயக்குநருக்கே வெளிச்சம். இரண்டாம் பாதி திரைக்கதை முழுவதும் தமிழ் சினிமா ரசிகர்கள் பல படங்களில் கண்டுகளித்ததே.
படத்திற்கான மதிப்பெண் - 2 / 5
மேலும் படிங்க காந்தாரா டீஸரில் இதை கவனித்தீர்களா ? துளு மொழியில் படத்தை வெளியிட வலியுறுத்தல்
Nayan 75 : பணம் பந்தியிலே குணம் குப்பையிலே
பெண்களை மையப்படுத்தி இருந்தாலும் அழுத்தமில்லாத திரைக்கதையில் நடிப்பதை நயன்தாரா நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]