
Superstar Rajinikanth: "இவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மை தானடா!" என்ற பாடல் வரிகள் ரஜினிகாந்தின் பாட்ஷா திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும். கேட்பதற்கு சாதாரணமாக இருக்கும் இந்த வரி, நூற்றுக்கு நூறு சதவீதம் ரஜினிகாந்திற்கு பொருத்தமாக இருக்கும். எந்தவொரு சினிமா பின்புலமும் இல்லாமல் திரைத்துறைக்குள் நுழைந்து 50 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராக வலம் வருவது என்பது அவ்வளவு எளிது கிடையாது. நிச்சயம் பெயருக்குள் காந்தம் இருந்தால் மட்டுமே, பல்வேறு நட்சத்திரங்களுக்கு இடையே சூப்பர் ஸ்டாராக ஜொலிக்க முடியும்.
1975-ஆம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் கதவை திறந்து கொண்டு ரஜினிகாந்த் திரையில் தோன்றிய போது, பார்வையாளர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்காது; இவர் தான் அடுத்த 50 ஆண்டுகளுக்கு தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழப் போகிறார் என்று. ஆனால், இந்த நட்சத்திர அந்தஸ்து அவ்வளவு எளிதாக கிடைத்துவிடவில்லை. இதற்கு பின்னணியில் எத்தனையோ போராட்டங்கள், அவமானங்கள் என அதன் பாதை மிகக் கடினமாக இருந்திருக்கும். தொடக்க காலத்தில் நிறம் தொடர்பான பல அவமானங்களை ரஜினிகாந்த் சந்தித்திருக்க கூடும்.
ஏனெனில், சினிமா நடிகர்கள் என்றாலே பார்ப்பதற்கு பால் நிறத்தில் இருக்க வேண்டும் என்ற ஒரு எழுதப்படாத விதி இருந்தது. கதாநாயகர்கள் மட்டுமல்லாமல், ஏதோவொரு காட்சியில் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும், வெள்ளை நிறத்தில் இருக்கும் மனிதர்களை மட்டுமே பயன்படுத்தினர். அந்த அளவிற்கு நிறத்தின் மீதான மோகம் சினிமா துறையில் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்த காலம் அது. அந்த நேரத்தில் தான் ரஜினிகாந்தின் வருகை, புதியதொரு ஒளியை சினிமா மீது பாய்ச்சியது. கதாநாயகர்களுக்கு என அதுவரை வரையறுக்கப்பட்டிருந்த அனைத்து பிம்பங்களையும் அடித்து நொறுக்கி திரையில் தோன்றிய முதல் நட்சத்திரம் ரஜினிகாந்த்.
இது தான் அழகு என்று கட்டமைக்கப்பட்ட பிம்பத்தை மட்டுமே திரையில் பார்த்த ரசிகர்களுக்கு, சாமானியராக தங்களை போன்று காட்சியளித்த ரஜினிகாந்தின் தோற்றம் பெருமளவு பிடித்துப் போனது. இதுவே ரஜினிகாந்தின் வெற்றிக்கு முதல் படியாக அமைந்தது. ஆம், உண்மையாகவே வசீகரிக்கும் ஒரு அழகை ரஜினிகாந்திடம் பார்வையாளர்கள் கண்டார்கள். அந்த வசீகரம் தான் பலரையும் அவரது ரசிகர்களாக மாற்றியது. ரஜினிகாந்தின் சினிமா வருகையை ஒரு புரட்சி என்று கூட கூறலாம். காரணம், சாமானியர்களும் கதாநாயகர்களாக மாற முடியும் என்ற தன்னம்பிக்கையை பலருக்குள் விதைத்தது ரஜினிகாந்த் தான்.

ரஜினிகாந்தின் வருகைக்கு பின்னர், சினிமாவில் நடித்த பலரிடமும் அவரது சாயல் தென்பட்டது. விவேக், சின்னி ஜெயந்த் என காமெடியன்களில் தொடங்கி, விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் என மற்ற ஹீரோக்கள் வரை ரஜினியின் சாயலை திரையில் பிரதிபலித்தனர். சமீபத்தில் வெளியான ட்யூட் திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதனனின் உடல்மொழி முற்றிலும், ரஜினியை நகல் எடுத்ததை போன்று அமைந்தது. ரஜினிகாந்த் சினிமா உலகில் கால் பதித்த 50-வது ஆண்டிலும், அவரைப் போன்ற உடல்மொழியுடன் நடித்து கைத்தட்டல்களை வாங்குவது என்பது வேறு எந்தவொரு நடிகருக்கும் நிகழாத ஆச்சரியம். இது மட்டுமின்றி, 1990 முதல் 2000 வரை பல படங்களில் ரஜினியின் போஸ்டர்கள், ரெஃபரன்ஸ் என மற்றவர்களின் திரைப்படங்களிலும் ரஜினியே ஆக்கிரமித்திருந்தார். இவை அனைத்துமே அவரை இன்று வரை சினிமா உலகில் உச்சத்தில் வைத்திருக்கிறது.
மேலும் படிக்க: Padayappa Re-Release: படையப்பா படத்தில் நீலாம்பரியாக நடிக்க ஐஸ்வர்யா ராயை முதலில் அணுகினோம்; சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்த ரஜினிகாந்த்
சினிமாவை கடந்து தனிப்பட்ட முறையிலும் ரஜினிகாந்தின் செயல்பாடுகளுக்கு பலர் ரசிகர்களாக இருக்கின்றனர். எந்தவொரு நடிகரிடமும் நெருங்கி பழகும் வாய்ப்பு ரசிகர்களுக்கு கிடைப்பதில்லை. அவர்களுடன் பணியாற்றியவர்கள் கூறும் தகவல்களின் அடிப்படையில் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையையும் ரசிகர்கள் அறிந்து கொள்கின்றனர். அதன்படி, ரஜினியுடன் பல படங்களில் பணியாற்றியவர்கள், அவரது எளிமையான குணத்தை பதிவு செய்துள்ளனர். தனது தோற்றத்தை மறைத்துக் கொண்டு சாதாரண மக்களோடு மக்களாக ரஜினிகாந்த் பலமுறை நகர்வலம் வந்திருக்கிறார் என்று அவரது நண்பர்கள், அவருடன் பணியாற்றிய நடிகர்கள், இயக்குநர்கள் கூறி இருக்கின்றனர். மேலும், பொது இடங்களில் தன்னால் கூட்டம் கூடி மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுவதையும் ரஜினிகாந்த் விரும்புவதில்லை என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். இதன் மூலம் தனிப்பட்ட வாழ்க்கையையும், நட்சத்திர அந்தஸ்தையும் எவ்வாறு சமநிலையுடன் பராமரிக்க வேண்டும் என்று மற்ற நடிகர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக ரஜினிகாந்த் விளங்குகிறார்.
திரைப்படம் எந்த அளவிற்கு வசூலித்து சாதனை படைத்திருக்கிறது என்பதை பொறுத்து தான், ஒரு நடிகரின் வெற்றி கணக்கிடப்படுகிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. நடிப்பு முதல் நடனம் வரை அனைத்தும் சிறப்பாக இருந்தாலும், திரைப்படத்தின் வெற்றி தான் அந்த நடிகரின் சந்தை மதிப்பையும், நட்சத்திர அந்தஸ்தையும் தக்க வைக்க உதவுகின்றன. அப்படி பார்க்கும் போது, ரஜினிகாந்தின் எண்ணற்ற திரைப்படங்கள் வசூலில் சாதனை படைத்திருக்கின்றன. ஆனால், பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷன் (Box office collection) அடிப்படையில் மட்டுமே ரஜினிகாந்தின் வெற்றியை சுருக்கி விட முடியாது. முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை, நெற்றிக் கண், கை கொடுக்கும் கை, அன்புள்ள ரஜினிகாந்த், எங்கேயோ கேட்ட குரல், தர்மதுரை, தளபதி, கபாலி என பல படங்களில் ஸ்டாராக இல்லாமல், முற்றிலும் நடிகராக மட்டுமே ரஜினி தோன்றி இருக்கிறார். எனினும், முரட்டுக்காளை, மனிதன், நல்லவனுக்கு நல்லவன், அண்ணாமலை, பாட்ஷா, படையப்பா, பேட்ட என ரசிகர்களுக்கு விருந்து வைக்கவும் ரஜினிகாந்த் தவறவில்லை. தனது தொழிலில் இப்படி ஒரு சமநிலையை கடைபிடிப்பதன் மூலமாகவே, இன்றும் சூப்பர் ஸ்டாராக ரஜினிகாந்த் திகழ்கிறார்.

சினிமாவில் ரஜினிகாந்திற்கு பிறகு வந்த எத்தனையோ நடிகர்கள் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளனர். ஆனால், அவர்களில் பலர் தற்போது ஹீரோவாக தொடர்வது இல்லை. அவர்களது வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் நடிப்பதாக விமர்சகர்கள் கூறினாலும், படங்களில் ஹீரோவாக மட்டுமே ஒரு நடிகர் தொடர்வதை அவரது சந்தை மதிப்பு மட்டுமே நிர்ணயம் செய்கிறது. அதில் இன்று வரை ரஜினிகாந்த் உச்சத்தில் இருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் காலத்திற்கு ஏற்ற வகையில் தொழில்நுட்பத்தையும், இளம் தலைமுறையினரையும் ரஜினிகாந்த் ஏற்றுக் கொண்டார். கருப்பு வெள்ளையில் தொடங்கிய ரஜினியின் பயணம் 3டி தொழில்நுட்பத்தை கடந்து செல்கிறது. மேலும், பா. ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ், ஞானவேல், நெல்சன் என இளம் தலைமுறை இயக்குநர்களுடன் கைகோர்த்து பணியாற்றி மாற்றத்தையும் வரவேற்கிறார்.
50 ஆண்டுகள் ஆன பின்னரும் கூட அவரது திரைப்படங்களை திருவிழா போன்று கொண்டாடும் ரசிகர்கள் இருக்கும் வரை, நிச்சயம் அவர் சூப்பர் ஸ்டாராகவே ஜொலிப்பார். பாடல் வரிகளுக்கு ஏற்ற வகையில், அவரது பெயரில் காந்த சக்தி இருப்பதை உணர முடிகிறது. ஏனெனில், இரும்பை நோக்கி ஈர்க்கப்படும் காந்தத்தை விட, ரஜினியை நோக்கி ஈர்க்கப்படும் ரசிகர்களின் வேகம் அதிகமாக இருக்கிறது.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Youtube
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]