ஒரு நடிகன் தனது முதல் படத்திலேயே அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி முத்திரை படைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஆனால் நடிகர் கார்த்திக்கு மட்டும் இந்த விஷயத்தில் விலக்கு அளிக்கலாம்.ஏனென்றால் அவர் நடித்த பருத்திவீரன் படம் காலம் கடந்தும் பேசப்படும்.
அப்படத்திற்கு கிடைக்காத அங்கீகாரமே கிடையாது. தேசிய விருது முதல் சர்வதேச விருதுகளை அள்ளிக் குவித்தது பருத்திவீரன் திரைப்படம். தமிழ் திரையுலகில் 45 ஆண்டுகளுக்கும் மேலாகக் கோலோச்சி வரும் நடிகர் ரஜினிகாந்த் காப்பான் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் சூர்யாவை பற்றிப் பேசுவதற்கு முன்பாக கார்த்தியை பெரிதும் பாராட்டினார். முதல் படத்திலேயே அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி கார்த்தி தன்னை ஆச்சர்யப்படுத்தியதாக ரஜினிகாந்த் புகழ்ந்து தள்ளினார்.
இத்தனை பாராட்டிற்கும் பருத்திவீரன் படத்தின் இயக்குநர் அமீரே முதன்மையானவர். நகரத்து இளைஞரான கார்த்தியை பருத்திவீரன் படத்திற்காக முற்றிலும் கிராமத்து இளைஞராக மாற்றி இருப்பார். ஒவ்வொரு காட்சிக்கும் எப்படி நடிக்க வேண்டும் என கார்த்தியிடம் எடுத்துரைத்து அவரது நடிப்பையும் மெருகேற்றினார்.
படத்தின் பட்ஜெட் குறித்து இயக்குநர் அமீர் தயாரிப்பாளர் ஞானவேலிடையே பிரச்சினை ஏற்பட்டாலும் பல்வேறு தடைகளைக் கடந்து வெளியான பருத்திவீரன் திரைப்படம் 350 நாட்களுக்கு மேல் திரையரங்குகளை ஆக்கிரமித்து வசூலை வாரிக் குவித்தது. பிரியாமணிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும், ராஜா முகமதிற்கு சிறந்த எடிட்டிங்கிற்கான தேசிய விருதும் கிடைத்தன.
மேலும் படிங்க காந்தாரா டீஸரில் இதை கவனித்தீர்களா ?
ஏறக்குறைய பருத்திவீரன் திரைப்படம் வெளியாகி 17 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இந்த நிலையில் கார்த்தியின் 25ஆவது படமான ஜப்பானின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் அவரை வைத்து இயக்கிய முந்தைய இயக்குநர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஒரு சிலரை தவிர பெரும்பாலானோர் பங்கேற்று கார்த்தியை பாராட்டிப் பேசினார். ஆனால் கார்த்தியை முதன் முதலில் வைத்து இயக்கிய அமீர் பங்கேற்கவில்லை.
சில நாட்கள் கழித்து இது தொடர்பாக ஒரு நேர்காணலில் அமீரிடம் கேட்டபோது, தன்னை முறையாக அழைக்கவில்லை என்றும் பருத்திவீரனை இயக்கியதால் இன்று வரை நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டிருக்கிறேன் என்றும் கவலை கூறினார். பருத்திவீரன் படத்தின் பட்ஜெட் பிரச்சினையில் பல வெளிவராத தகவல்களை அமீர் போட்டு உடைத்தார்.
மேலும் படிங்க பிடிச்சத செஞ்சா சூப்பர்ஸ்டார் ஆகலாம்! நயன்தாராவின் டைமிங் பஞ்ச்
இதற்கு பதிலளித்த தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அமீரை திருடன் எனவும் அவருக்கு திரைப்படம் எடுக்கத் தெரியாது எனவும் கடுமையாகச் சாடினார். இந்தக் காணொளி வைரலான நிலையில் இயக்குநர் அமீருக்கு ஆதரவாகக் குரல்கள் எழுந்தன. அமீரை தரம் தாழ்த்தி பேசியதற்காக ஞானவேல் மன்னிப்பு கேட்க வேண்டும் என திரையுலகினர் பலரும் வலியுறுத்தினர்.
இந்த நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கடிதம் ஒன்றை வெளியிட்டுளார். அதில் என்றைக்குமே அமீரை அண்ணன் என்றே அழைப்பேன் என்றும் அவரது சமீபத்திய பேட்டிகளில் என்மீது வைக்கப்பட்ட பொய் குற்றச்சாட்டுகள் என்னைக் காயப்படுத்தியது என்றும் தெரிவித்துள்ளார். அதற்குப் பதிலளிக்கும்போது நான் பயன்படுத்திய வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு மனப்பூர்வமாக வருத்தம் கூறுகிறேன் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் ஞானவேல் ராஜா.
.@GnanavelrajaKe sir issues a statement of clarification.#Paruthiveeranpic.twitter.com/7LVzmtU77B
— Studio Green (@StudioGreen2) November 29, 2023
பருத்திவீரன் படத்தின் பட்ஜெட் தொடர்பான வழக்கில் இருவரில் யார் உண்மை பேசுகின்றனர் என நீதிமன்றம் முடிவு செய்துவிடும் என்ற நிலையில் தற்போதைய வார்த்தை மோதல் இத்துடன் நிறைவடையும் என கோலிவுட் வட்டாரம் நம்புகிறது.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]