எத்தனை புதிய பேஷன் ஆடைகள் வந்தாலும், திருமணம், காதுகுத்து, கோவில் திருவிழா போன்ற சிறப்பான நிகழ்ச்சிகளில் பெண்கள் இன்றும் பட்டுப்புடவையையே அதிகம் தேர்ந்தெடுக்கின்றனர். பட்டுப்புடவை அணிய அழகாக இருந்தாலும், அதை சுத்தமாகவும் புத்தம்புதியதாகவும் வைத்திருப்பது சற்று கடினமான பணியாகும். தவறான முறையில் சலவை செய்தால் சாயம் நீங்கிவிடும். டிரை க்ளீனிங் செய்வதற்கான செலவும் அதிகமாக இருக்கும். எனவே, பட்டுப்புடவையை சாயம் போகாமலும், தன்மை மாறாமலும் வீட்டிலேயே எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
பராமரிப்பு முறைகள்:
பட்டுப்புடவையை சலவை செய்வதற்கு முன், அதை சரியாக பராமரிப்பது அவசியம். பலர் இதை ஒரு கலை என்றே கூறுகின்றனர். கடையில் இருந்து மகிழ்ச்சியுடன் வாங்கிய பட்டுப்புடவையை ஒரு முறை மட்டும் அணிந்து, பின்பு மடித்து அலமாரியில் போட்டுவிடுவது சரியான முறையல்ல. பலருக்கு பட்டுப்புடவையை எவ்வாறு துவைக்கவும், பராமரிக்கவும் வேண்டும் என்பது தெரியாது. எனவே, உடனடியாக லாண்டரிக்கு அனுப்பி விடுகின்றனர். இனி வீட்டிலேயே எளிதாக பட்டுப்புடவையை துவைக்க உதவும் சிம்பிள் டிப்ஸ் குறித்து இங்கு பார்க்கலாம்.
குளிர்ந்த நீரில் துவைக்கவும்:
பட்டுப்புடவைகளை துவைக்கும்போது எப்போதும் குளிர்ந்த நீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். துவைக்கும் முன் சிறிது நேரம் குளிர்ந்த நீரில் பட்டு புடவையை ஊற வைக்கலாம். குறிப்பாக வெந்நீர் பயன்படுத்தக் கூடாது, ஏனெனில் இது புடவையின் நிறத்தை வெளுக்க செய்யும்.
வெள்ளை வினிகர் பயன்பாடு:
ஒரு வாளி தூய்மையான குளிர்ந்த நீரில் 2 ஸ்பூன் வெள்ளை வினிகர் கலந்து, புடவையை 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்பு சுத்தமான நீரில் கழுவினால், உங்கள் பட்டுப்புடவையில் உள்ள கறைகள் எளிதாக நீங்கும்.
வெயிலில் உலர்த்த வேண்டாம்:
பட்டுப்புடவையை துவைத்த பிறகு கடுமையாக பிழியக்கூடாது. மெதுவாக தண்ணீரை வடிகட்டி, நிழலில் அதை உலர்த்த வேண்டும். நேரடியாக சூரிய ஒளியில் உலர்த்தினால், புடவையின் நிறம் மங்கிவிடும்.
தனியாக சேமிக்கவும்:
பட்டுப்புடவைகளை மற்ற ஆடைகளுடன் சேமிக்காமல், தனி இடத்தில் பருத்தித் துணியால் மூடி வைக்கவும். இது துணியின் தரத்தை நீண்டகாலம் பாதுகாக்கும்.
ஒன்றின் மேல் ஒன்று வைக்காதீர்கள்:
பல பட்டுப்புடவைகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைத்தால், உராய்வு காரணமாக துணி சேதமடையும். எனவே, ஒவ்வொன்றையும் மடித்து மஞ்சள் பையில் வைக்கவும். மஞ்சள் பை இல்லையென்றால், பருத்தித் துணியால் போர்த்தி வைக்கலாம்.
பயன்பாட்டிற்குப் பின் உடனடியாக மடிக்க வேண்டாம்:
ஒரு நிகழ்ச்சிக்கு பட்டுப்புடவை அணிந்த பிறகு, உடனடியாக மடித்து வைக்காமல், அதை 4 - 5 மணி நேரம் காற்றில் காய விடவும். பின்பு மடித்து வைக்கலாம்.
சுருட்டி வைப்பது நல்லது:
அனைத்து பட்டுப்புடவைகளையும் மடித்து வைப்பதை விட, குறிப்பாக பனாரஸ் பட்டு போன்றவற்றை சுருட்டி வைப்பது தான் நல்லது. புடவை வாங்கும் போதே கடைக்காரரிடம் பராமரிப்பு முறைகளை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
வெள்ளி ஜரிகை:
வெள்ளி ஜரிகை உள்ள பட்டுப்புடவைகளை ஜரிகை உள்ள பக்கம் உள்புறம் இருக்கும் வகையில் மடித்து வைக்க வேண்டும்.
இந்த எளிய உதவிக்குறிப்புகளைப் பின்பற்றினால், உங்கள் பட்டுப்புடவை பல ஆண்டுகளுக்கு புத்தம் புதியதாக பிரகாசிக்கும். அதிக செலவு இல்லாமல் வீட்டிலேயே உங்கள் விருப்பமான பட்டு புடவைகளை பராமரித்து கொள்ளலாம்.
Image source: google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation