நடிகை சமந்தா ‘பாணா காத்தாடி’ படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார். ஆனால் அதற்கு முன்பே அவர் நடித்த படம் 'மாஸ்கோவின் காவிரி’. அதே போல் தெலுங்கில் ‘ஏ மாய சேஷாவே’ என்ற படம் மூலம் அறிமுகம் ஆனார். சென்னை பல்லாவரத்தை சேர்ந்த இவர், சென்னை ஹோலி ஏஞ்சல்ஸ் ஸ்கூலில் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். சினிமாவுக்கு வருவதற்கு முன்பே வெல்கம் கேர்ள், மாடலிங், ஆங்கர் என பலவகையான வேலைகளை செய்து வந்தவர், இன்று டாப் நடிகைகளில் ஒருவராக அடைந்திருக்கும் உயரம் அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறது.
அவரின் நடிப்பும், துள்ளலான பேச்சும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆனார். ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தவர் விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என டாப் ஸ்டார்களுடன் ஜோடி சேர்ந்தார். தெலுங்கில் மகேஷ் பாபு, பிரபாஸ், ஜீனியர் எம்டிஆர், நாக சைதன்யா, நானி என சூப்பர் ஸ்டார்களுடன் சேர்ந்து நடித்து உச்ச நடிகையாக உயர்ந்தார்.
இந்த பதிவும் உதவலாம்:கேன்சரிடம் போராடி வென்ற பெண் பிரபலங்கள்
இந்த சமயத்தில் நாக சைதன்யாவுக்கு சமந்தாவுக்கும் காதல் மலர, கடந்த 2017 ஆம் ஆண்டு இவர்களின் திருமணம் கோவாவில் மிக பிரம்மாண்டமாக நடந்தது. 2 வருடமாக காதலித்து வந்த நாக சைதன்யாவும் சமந்தாவும் தம்பதிகளாக இணைந்தனர். கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த சமந்தா அகினேனி குடும்பத்திற்காக இந்துவாக மதம் மாறினார். சமந்தா ரூத் பிரபு என்ற பெயரை சமந்தா அகினேனி எனவும் மாற்றினார். மாமியார் குடும்பத்துடன் ஐதாராபத்தில் குடியேறினார்.
அதே நேரம் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வந்தார். காதலர்களுக்கு கப்புல் கோல்ஸாக இருந்த இவர்கள், கடந்த 2021ஆம் ஆண்டு தங்களது விவாகரத்தை அறிவித்து ஷாக் கொடுத்தனர். அடுத்த ஒரு மாதத்திற்கு சமந்தா தலைப்பு செய்தியானார். அவரின் விவாகரத்து குறித்து ஏகப்பட்ட சர்ச்சைகள் வெடித்தன. கருகலைப்பு, ஃபேமலி ஃபேன் 2 படத்தில் சமந்தாவின் ரோல், வேறொருவருடன் காதல், குழந்தையின்மை என இப்படி பல வதந்திகள் சமந்தா பற்றி வெளிவரத் தொடங்கின.
இதிலிருந்து மீள யோகா பயிற்சியில் சேர்ந்தார். நண்பர்களுடன் சுற்றுலா சென்றார். ஆன்மீகத்தில் கவனத்தை திருப்பினர். தனது ஆதங்கத்தை உடற்பயிற்சி மூலம் திசை திருப்பினார். கடுமையான வொர்க்கவுட்களை செய்தார். இன்ஸ்டாவில் அடிக்கடி பதிவு வெளியிடவும் ஆரம்பித்தார். இப்படி மீண்டும் மீண்டும் வலுப்பெற்று எழுந்து போராட தயாரான சமந்தாவை மயோசிடிஸ் என்ற அரிய ஆட்டோ இம்யூன் நோய் தாக்கியது. மலை போல் இருந்தவர் மீண்டும் சாய தொடங்கினார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவமனையிலே சிகிச்சை பெற்று வந்தார். பின்பு இந்த விஷயத்தை மிகவும் தைரியமாக இன்ஸ்டா மூலம் உலகத்திற்கு தெரியப்படுத்தினார். பிரபலங்கள் தொடங்கி ரசிகர்கள் என அனைவரும் சமந்தாவுக்கு ஆறுதல் கூறி பதிவு வெளியிட தொடங்கினர்.
திருமண முறிவு, நோய் என சமந்தாவுக்கு அடி மேல் அடி விழுந்தும், அதிலிருந்து மீண்டு வர அனைத்துவிதமான முயற்சிகளையும் எடுத்தார். சில மாதங்களுக்கு முன்பு மயோசிடிஸ் நோய்க்காக வீட்டிலேயே சிகிச்சை எடுக்கவும் தொடங்கினார். மாத்திரைகள், அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டார்.மனம் தளராமல் போராடினார். விமர்சனங்களால் உடைந்து போகாமல் உறுதியாய் நின்றார். முழு கவனத்தையும் தனது தனது ஆரோக்கியம் மீது செலுத்தினார். முக்கியமாக தன்னை ஆக்டிவாக வைத்து கொண்டார்.
இவ்வளவு பிரச்சனையிலும் சமந்தா தனது நடிப்பை கைவிடவில்லை. ஒருபக்கம் சிகிச்சை, மறுபக்கம் நடிப்பு என முழு நேரத்தையும் இதற்காகவே செலவழித்தார். மயோசிடிஸ் நோயிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்ட சமந்தா இப்போது ரிஸ்க் அதிகம் இருக்கும் சண்டை காட்சிகளில் நடித்து ரசிகர்களை வியக்க வைக்கிறார். சமீபத்தில் அவரின் நடிப்பில் வெளிவந்த ’யசோதா’ திரைப்படம் பலரின் பாராட்டுக்களையும் பெற்று இருந்தது. அடுத்து சமந்தா பெரிதும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் புராண படமான ’சாகுந்தலம்’ விரைவில் வெளியாகவுள்ளது.
தற்போது ’சிட்டாடல்’ என்ற வெப் தொடரில் சமந்தா நடித்து வருகிறார். இதற்காக அவர் சண்டை பயிற்சி மற்றும் குதிரை பயிற்சியும் பெறுகிறார். சில தினங்களுக்கு முன்பு சண்டை பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்தில் சமந்தாவுக்கு காயங்கள் ஏற்பட்டன. இரத்த காயத்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, மீண்டும் மீண்டும் எழுவேன் என்றார். சமந்தாவின் இந்த போராட்ட குணம் தான் அவரை இத்தனை தடைகளிலிருந்து மீண்டெழ வைத்தது. இனி இதுப்போல், ஆயிரம் தடைகள் வந்தாலும் பீனீக்ஸ் பறவை போல் சமந்தா அன்னாந்து பறப்பார் என்கின்றனர் அவரின் ரசிகர்கள். அதுமட்டுமில்லை இந்த வருடத்துடன் சமந்தா சினிமாவுக்கு வந்து 13 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதையும் அவரின் ரசிகர்கள் ஒருபக்கம் கொண்டாடி வருகின்றனர்.
இந்த பதிவும் உதவலாம்:பெண் என்பதால் இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நிராகரிக்கப்பட்டாரா?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: google
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]