
சரும பராமரிப்பு என்றாலே விலையுயர்ந்த க்ரீம்கள் பயன்படுத்துவது என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், உங்கள் தினசரி காலை பழக்க வழக்கங்கள் தான் உங்களுடைய முதுமையின் வேகத்தை தீர்மானிக்கின்றன. அதிக பணம் செலவு செய்யாமல், முதுமையை தாமதப்படுத்தி, இளமையுடன் இருப்பதற்கான சில குறிப்புகளை இதில் காணலாம்.
மேலும் படிக்க: உங்கள் சருமத்திற்கு இயற்கை பொலிவை கொடுக்கும் கிரீன் டீ ஃபேஸ் பேக்
காலை எழுந்ததும் காபி அருந்துவதற்கு முன்பாக, ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரை குடிப்பதில் இருந்து அன்றைய தினத்தை தொடங்குங்கள். இது உங்கள் உடலுக்கு நீங்கள் செய்யக் கூடிய மிக எளிய உதவியாகும். இது உங்கள் வளர்சிதை மாற்றத்தைத் சீராக்குகிறது. இதன் மூலம் தூக்கத்திற்கு பிறகு சருமத்தை நீரேற்றமாக மாற்ற முடியும். இது, உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. இத்துடன் சிறிதளவு எலுமிச்சை சாறு அல்லது நெல்லிக்காய் சாறு சேர்ப்பதன் மூலம் கூடுதல் நன்மைகளை பெறலாம். இவை இரண்டும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடும் அன்டிஆக்ஸிடன்ட்களால் நிரம்பியுள்ளன. ஃப்ரீ ரேடிக்கல்கள் தான் முதுமையை துரிதப்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தினமும் உடற்பயிற்சி மேற்கொள்ளும் வழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். இதற்காக காலை எழுந்ததும் உடற்பயிற்சி கூடத்திற்கு செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. யோகா அல்லது எளிய நடைபயிற்சியை கூட காலை நேரத்தில் செய்யலாம். இதன் மூலம் இரத்த ஓட்டம் அதிகரித்து சருமத்திற்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்க உதவுகிறது. மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலை குறைக்க இது பயன்படுகிறது. இதன் மூலம் முதுமை தோற்றத்தை கட்டுப்படுத்தலாம்.

மேலும் படிக்க: இளநரை பிரச்சனையால் பாதிக்கப்பட்டவரா நீங்கள்? இந்த 5 உணவுகளை அவசியம் சாப்பிடவும்
சன்ஸ்க்ரீன் பயன்படுத்துவதை தவிர்க்க கூடாது. நீங்கள் வீட்டில் இருந்தபடி வேலை செய்தாலும் கூட சன்ஸ்கிரீன் அவசியம். தினமும் காலையில் குறைந்தது எஸ்.பி.எஃப் 30 கொண்ட சன்ஸ்கிரீனை பயன்படுத்த வேண்டும். முகத்துடன் சேர்த்து உங்கள் கழுத்து மற்றும் கைகள் போன்ற பகுதிகளிலும் சன்ஸ்கிரீனை தடவ வேண்டும். அதிகப்படியான வெயிலில் இருந்தும், புறஊதாக் கதிர்களில் இருந்தும் நம்மை பாதுகாக்க இது உதவும்.
காலையில் நீங்கள் சாப்பிடும் உணவு, உங்கள் சருமம் எப்படி இருக்கிறது என்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சர்க்கரை நிறைந்த உணவுகளுக்கு பதிலாக, அன்டிஆக்ஸிடன்ட்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை தினமும் சாப்பிடலாம். உதாரணத்திற்கு, பெர்ரி பழங்கள் மற்றும் சியா விதைகள் கொண்ட ஓட்ஸ், அவகேடோ பழம், கீரை, ஆளிவிதைகளுடன் கூடிய ஜூஸ் வகைகள், பழங்களுடன் சேர்ந்த பாதாம் பருப்பு ஆகியவற்றை நாள்தோறும் காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

அமைதியான மற்றும் நேர்மறையான மனநிலை என்பது நேரடியாக சரும பராமரிப்புடன் தொடர்புடையது இல்லை என்றாலும், உங்கள் மனதை ஆரோக்கியமாக பராமரிக்க இவை உதவும். இதன் மூலம் மன அழுத்தத்தை உங்களால் கட்டுப்படுத்த முடியும். எனவே, காலை எழுந்ததும் செல்போன் பயன்படுத்துவதை தவிர்த்து சில நிமிடங்கள் நிதானமாக அமர்ந்து அன்றைய தினத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை திட்டமிடலாம். இது அந்த தினத்தை திறம்பட நிர்வகிக்க உதவும்.
இவை அனைத்தையும் தினமும் சீராக பின்பற்றுவதன் மூலம் முதுமை தோற்றத்தை தாமதப்படுத்தி இளமையாக காட்சியளிக்க முடியும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]