முடி உதிர்வு என்பது பலருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஒரு பிரச்சனையாக உள்ளது. ஆனால் இதற்கு இயற்கையே சிறந்த தீர்வை வழங்குகிறது. ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்படும் இயற்கை எண்ணெய்கள், முடி வளர்ச்சியை தூண்டி, முடி உதிர்வதை தடுக்கின்றன.
மேலும் படிக்க: தொல்லை தரும் முகப்பருக்களை ஈசியாக போக்கலாம்; இந்த வீட்டு வைத்திய முறைகளை பின்பற்றவும்
அதன்படி, முடி வளர்ச்சியை அதிகரிக்கக் கூடிய சில விதமான எண்ணெய்கள் குறித்து இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். இவை இயற்கையாக இருப்பதனால் பக்க விளைவுகள் அல்லது ஒவ்வாமை போன்றவற்றை ஏற்படுத்தும் வாய்ப்புகள் குறைவு.
நூற்றாண்டுகளாக பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் கருஞ்சீரக எண்ணெய், முடி பராமரிப்பிலும் சிறந்து விளங்குகிறது. இதில் உள்ள தைமோகுவினோன் (thymoquinone) என்ற வேதிப்பொருள், ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இது தலையில் ஏற்படும் எரிச்சலை குறைத்து, முடியின் வேர்க்கால்களில் அடைப்புகளை நீக்கி, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
ஒரு டேபிள்ஸ்பூன் கருஞ்சீரக எண்ணெய்யை லேசாக சூடாக்கி, முடி உதிர்ந்த இடங்களில் மென்மையாக மசாஜ் செய்யவும். ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை இதை தலையில் ஊறவிட்டு, பின்னர் மிதமான ஷாம்பூ கொண்டு குளிக்கவும். இதை வாரத்திற்கு 3 - 4 முறை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
ரோஸ்மேரி எண்ணெய், முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. இது முடி வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் மினாக்ஸிடில் மருந்துக்கு நிகராக செயல்படும் திறன் கொண்டது என்று கூறப்படுகிறது. இது தலைக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, முடியின் வேர்க்கால்களை வலுப்படுத்துகிறது. மேலும், ஹார்மோன் சமநிலையின்மையால் ஏற்படும் முடி உதிர்வை சரிசெய்ய உதவுகிறது.
ரோஸ்மேரி எண்ணெய் மிகவும் அடர்த்தியாக இருப்பதால், இதை நேரடியாக பயன்படுத்தக் கூடாது. 4 - 5 துளிகள் ரோஸ்மேரி எண்ணெய்யுடன், தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் போன்ற ஏதாவது ஒரு எண்ணெய்யில் இரண்டு டேபிள்ஸ்பூன் கலந்து பயன்படுத்தலாம். இதை தலையில் மசாஜ் செய்து, சுமார் ஒரு மணி நேரம் கழித்து குளிக்கவும். சிறந்த பலனை பெற, இதை வாரத்திற்கு மூன்று முறை பயன்படுத்தலாம்.
மேலும் படிக்க: முடி உதிர்வா? கவலை வேண்டாம், உங்கள் கூந்தலுக்கு ஊட்டமளிக்கும் சூப்பர் உணவுகள்!
வெங்காயத்தின் வாசனை சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், அதன் எண்ணெய் முடி வளர்ச்சிக்கு மிகவும் சிறந்தது. வெங்காய எண்ணெயில் உள்ள சல்பர், கொலஜன் உற்பத்தியை அதிகரித்து, முடியின் வேர்க்கால்களுக்கு புத்துயிர் அளிக்கிறது. இது முடி உதிர்தல் மற்றும் வழுக்கை போன்ற பிரச்சனைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது தவிர, பொடுகு மற்றும் தலையில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுகளையும் எதிர்த்து போராட உதவுகிறது. வெங்காய எண்ணெய்யை தலையில் தடவி, 30 - 60 நிமிடங்கள் கழித்து, மிதமான ஷாம்பூ கொண்டு குளிக்க வேண்டும். வாரத்திற்கு இருமுறை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
சமையலறைகளில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் ஆலிவ் எண்ணெய், முடிக்கும் பல நன்மைகளை வழங்குகிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்டுகள், தலைமுடியை பாதுகாத்து, முடி இழைகளுக்கு ஈரப்பதத்தை அளிக்கிறது. மேலும், முடி உதிர்வுக்கு காரணமாக இருக்கும் டைஹைட்ரோடெஸ்டோஸ்டிரோன் (DHT) என்ற ஹார்மோனின் உற்பத்தியை குறைக்கும் திறன் இதற்கு இருக்கிறது. இந்த எண்ணெய்யை சிறிது சூடாக்கி, தலையில் மென்மையாக மசாஜ் செய்யவும். ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் கழித்து, மிதமான ஷாம்பூ கொண்டு குளிக்கலாம்.
கூந்தல் பராமரிப்புக்கு உலகளவில் தேங்காய் எண்ணெய் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், தலைமுடிக்கு புத்துயிர் தருகிறது. இது முடியை ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், முடியின் வேர்களை வலுப்படுத்தி, முடி உதிர்வதையும் தடுக்கிறது. செக்கில் ஆட்டப்பட்ட தேங்காய் எண்ணெய்யை தலையில் தடவி, ஒரு மணி நேரம் ஊறவிட்டு பின்னர் மிதமான ஷாம்பூ கொண்டு குளிக்கவும். இது பொடுகு முதல் முடி உதிர்தல் வரை பல பிரச்சனைகளுக்கு தீர்வு தரும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]