பிஸியாக இருப்பவர்களுக்கு சில சமையல் குறிப்புகள்


S MuthuKrishnan
27-06-2025, 11:26 IST
gbsfwqac.top

    புது அரிசியில் சாதம் வடிக்கும் போது, குழைவாக ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொள்ளும். சாதம் உதிரி உதிரியாக இருக்க ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்க்க வேண்டும்.

    காலையில் கீரை சமைக்க இரவே வாங்கி விட்டால், அது வாடிப் போகாமல் இருக்க கீரையின் வேர் பாகத்தை நீரில் மூழ்கும்படி வைக்கலாம்.

    அப்பளம் நமத்துப் போகாமல் இருக்க உளுந்தம் பருப்பு வைத்திருக்கும் டப்பாவில் அப்பளங்களை மேலாக வைத்து இறுகி மூடிவிட்டால் போதும்.

    கருவேப்பிலை துவையலுக்கு உளுந்தம் பருப்புக்கு பதில் வேர்க்கடலையை வறுத்து போட்டால் துவையல் சுவையாக இருக்கும்.

    சாம்பார், கீரை, புளிப்பு கூட்டு போன்றவற்றை கொதித்து இறக்கும் சமயத்தில் சிறிதளவு வெந்தயப் பொடி தூவினால் வாசனையாக இருக்கும்.

    வெண்டைக்காய் பொரியல் செய்வதற்கு முன்பு வெண்டைக்காயை நறுக்கி வெயிலில் கால் மணி நேரம் உலர வைக்கவும். பிறகு பொரியல் செய்தால் வழுவழுப்பு நீங்கி விடும்.

    வாழைத்தண்டு, வாழைப் பூவை நறுக்கியதும், அரிசி களைந்த நீரில் போட்டு விட்டு பிறகு மோர் கலந்த நீரில் அலசி பின்பு பொரியல் செய்தால், நிறம் மாறாமலும் துவர்ப்பு குறைவாகவும், சுவை அதிகமாகவும் இருக்கும்.

    ரசம் மணக்க வேண்டுமா? புளிக் கரைசலுடன் பழுத்த தக்காளியை மிக்சியில் அரைத்து சேர்த்து ரசம் வைத்து, கீழே இறக்கி கொத்துமல்லித் தழையை தூவி விடுங்கள். வீடே கமகமனு இருக்கும்.

    கேசரி செய்யும் போது தண்ணீரின் அளவைக் குறைத்து, பால் சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

    மீதமுள்ள காய்கறி பொரியல்களை தோசை மாவுடன் கலந்து வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு அடை மாதிரி ஊற்றலாம்.சுவை அருமையாக இருக்கும்.

    எந்தவிதமான சூப் செய்தாலும் ஒரு டீஸ்பூன் அவலை பொடி செய்து சூப்பில் சேர்த்துக் கொதிக்க விட்டால் சூப் கெட்டியாகவும், ருசியாகவும் இருக்கும்.